கேரளாவின் இரண்டு முக்கிய சக்திகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள், மக்களுடனான அவர்களது தொடர்பை இழந்துவிட்டதாகவும் அதனால் விரைவில் அங்கு தாமரை மலரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை அன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.






நாட்டில் காங்கிரஸ் வேகமாக அழிந்து வருகிறது, உலகம் கம்யூனிஸ்டுகளை வெகு காலத்திற்கு முன்பே ஒழித்து விட்டது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியால் மட்டுமே மாநிலத்தை வளர்ச்சி மற்றும் வளமான பாதையில் அழைத்து செல்ல முடியும் என்றும் திருவனந்தபுர புறநகர் பகுதியான கஜகூத்தத்தில் நடைபெற்ற பட்டியல் சமூகப்பிரிவு கூட்டத்தில் அமித் ஷா கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், "கேரளாவுக்கு எதிர்காலம் என்றால் அது பாஜகதான். மோடி ஆட்சியால் மாநிலத்தின் தேவையான மாற்றத்தை கொண்டு வர முடியும். மத்திய பாஜக அரசு வறுமையை ஒழித்து இந்தியாவிற்கு புதிய பாதையை அமைக்க உறுதி பூண்டுள்ளது. ஏழைகளுக்கு எரிவாயு இணைப்புகள், தேவைப்படுபவர்களுக்கு கழிப்பறைகள் போன்ற அரசின் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.


ஏழைகள் மற்றும் தலித்துகளைப் பற்றி காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும் எப்போதும் பெரிதாகப் பேசி வந்தாலும், அவர்களின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை என குற்றம்சாட்டிய அமித் ஷா, "எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தபோது, ​​​​பட்டியல் சமூகத்திலிருந்து (ராம்நாத் கோவிந்த்) ஒரு குடியரசு தலைவரை உருவாக்கினோம்.


இப்போது நாங்கள் ஒரு பழங்குடியின தலைவரான திரௌபதி முர்முவை நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு உயர்த்தியுள்ளோம். காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) வார்த்தைகள் மற்றும் செயல்கள் ஒருபோதும் பொருந்தியதில்லை. மாநிலத்தில் தேவையான மாற்றத்தை பாஜகவால் மட்டுமே கொண்டு வர முடியும். ஒரு மாற்றத்திற்காக மக்கள் பாஜகவை ஆதரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் மாநிலத்தில் விரைவில் தாமரை மலரும்" என்றார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு அவர் மாநில மக்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். (10 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஓணம் செப்டம்பர் 8 அன்று கொண்டாடப்படுகிறது). பின்னர் அவர் நகரில் கலந்து கொண்ட கலாசார நிகழ்ச்சிகளின் படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.


கேரள பயணம் குறித்து ட்வீட் செய்த அமித்ஷா, "ஒவ்வொரு இந்தியனும் கேரளாவின் செழுமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கிறான். மங்களகரமான ஓணம் திருநாளில் அழகான நிலையில் இருக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.