கடந்த செப்டம்பர் 5ம் தேதி, குஜராத் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் திரும்பி கொண்டிருந்த டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் கார், பால்கர் என்ற இடத்தில் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
அந்த காரில் 4 பேர் இருந்தனர். சம்பவ இடத்திலேயே சைரஸ் மிஸ்திரி, அவரது நண்பர் ஜஹாங்கீர் பண்டோல் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களுடன் காரில் பயணித்த அனாஹிதா (55), அவரது கணவர் டேரியஸ் (60), ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டதன் விளைவாக உயிர் தப்பினர். விபத்து நடந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், காரில் பயணித்த மும்பையின் சிறந்த மகளிர் மருத்துவரான அனாஹிதா பண்டோல் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிஸ்திரியின் சில்வர் மெர்சிடிஸ் காரை மருத்துவர் அனாஹிதா பண்டோல் ஓட்டினார். விபத்து நடந்தபோது தொழிலதிபர் பின்னால் அமர்ந்திருந்தார். அனாஹிதா மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், "அறிக்கைகள் மற்றும் விசாரணையின் அடிப்படையில், அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, எனவே, அனாஹிதா பண்டோல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் அனாஹிதாவின் கணவர் டேரியஸ் பண்டோலின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கார் விபத்தில் இருந்து தப்பிய டேரியஸ் பண்டோல், கடந்த மாத இறுதியில் மும்பை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டேரியஸ் பண்டோல் தனது வாக்குமூலத்தில், மும்பைக்கு சென்று கொண்டிருந்தபோது, மெர்சிடிஸ் பென்ஸ் காரை தனது மனைவி அனாஹிதா ஓட்டிச் சென்றதாகக் கூறினார். அவர்களின் வாகனத்திற்கு முன்னால் சென்ற ஒரு கார் மூன்றாவது பாதையிலிருந்து இரண்டாவது பாதைக்கு சென்றது, அனாஹிதாவும் அதையே பின்பற்ற முயன்றார்.
இதனால், விபத்து ஏற்பட்டது. அனாஹிதா பண்டோல் இன்னும் குணமடைந்து வருவதால் அவரது வாக்குமூலம் இன்னும் பதிவு செய்யப்படவில்லை" என்றார்.
சைரஸ் மிஸ்திரி 1968 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி மும்பையில் பிறந்தவர். இவர் அயர்லாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர். பள்ளி படிப்பை மும்பையில் படித்த இவர், பட்டப்படிப்பை லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் முடித்தார். 2011 ஆம் ஆண்டு, டாடா சன்ஸ் குழுமத்தின் துணை தலைவராக பொறுப்பேற்றார்.
மேலும் டாடா இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா பவர், டாடா டெலிசர்வீசஸ், இந்தியன் ஹோட்டல்கள், டாடா குளோபல் பானங்கள் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் உள்ளிட்ட அனைத்து முக்கிய டாடா நிறுவனங்களின் தலைவராகவும் இருந்தார்.
பின்னர் 2012 ஆம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ரத்தன் டாடா விலகியதையடுத்து, தலைமைப் பொறுப்பிற்கு சைரஸ் மிஸ்திரி தேர்வு செய்யப்பட்டார். வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர், டாடா குழுமத்தின் தலைமை பொறுப்பேற்றது முதல் முறையாகும். 2016 ஆம் ஆண்டு, டாடா குழுமத்தின் தலைமை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.