இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 2023ம் ஆண்டு, ஜனவரி 8ம் தேதியோடு முடிவடைகிறது. கடந்த அக்டோபர் 20ஆம் தேதி, அதற்கான தேர்தலை தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, வரும் நவம்பர் 12ம் தேதி ஒரே கட்டமாக இமாச்சலப் பிரதேச தேர்தல்  நடத்தப்படுகிறது. அதற்கான முடிவுகள், டிசம்பர் 8ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட உள்ளது.


இமாச்சலில் ஆளும் கட்சியான பா.ஜ.க.விடமிருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.  மக்கள் ஆதரவை பெறும் வகையில் அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம், 18 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவி தொகை என பல்வேறு சமூக நல திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.


மேலும், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) திரும்பி கொண்டு வரப்படும், விவசாயம் மற்றும் தோட்டக்கலை ஆணையம் அமைக்கவும் கட்சி உறுதியளித்தது. மேலும், விவசாயிகள்-தோட்டக்கலை வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து ஆப்பிள் உள்ளிட்ட பழங்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு கிராமத்திலும் 1 லட்சம் அரசு வேலைகள் மற்றும் மொபைல் கிளினிக்குகள் திறக்கப்படும் என்றும் காங்கிரஸ் உறுதியளித்தது. இளைஞர்களுக்கு ஸ்டார்ட்-அப் யூனிட்களை அமைப்பதற்கு உதவி செய்து தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்காக, மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 10 கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும், இளைஞர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பிரதீபா சிங் ஆகியோர் கூட்டாக தேர்தல் அறிக்கையை சிம்லாவில் வெளியிட்டனர். புதிய சுற்றுலா கொள்கை உருவாக்கப்படும் என்றும், கிராமங்களில் சுற்றுலாவை மேம்படுத்த ‘ஸ்மார்ட் வில்லேஜ்’ திட்டம் தொடங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ராஜீவ் சுக்லா கூறுகையில், "காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் பாரம்பரியம் காங்கிரசுக்கு உண்டு. நாங்கள் பாஜகவை போல அல்ல, அவர்கள் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, பின்னர் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.


ஆட்சி அமைந்தவுடன் அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் ஒரு லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும். காலியாக உள்ள அரசு பணியிடங்களும் நிரப்பப்பட்டு இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முதியோர் ஓய்வூதியம் உயர்த்தப்படும். 75 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு சிறப்பு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும்" என்றார்.