பெங்களூருவில் இளம்பெண்ணை ரேபிடோ பைக் டாக்ஸி டிரைவர் பளார் என அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாறுமாறாக ஓட்டியதால் வண்டியை பாதியிலேயே நிறுத்த சொல்லிவிட்டு, அந்த பெண் தட்டி கேட்ட காரணத்தால், ரேபிடோ பைக் டாக்ஸி டிரைவர் அவரை அறைந்துள்ளார். இதனால், நிலைதடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார்.
பைக் டாக்ஸி டிரைவர் மீது குவியும் புகார்கள்:
பைக் டாக்ஸி டிரைவர்கள் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அதிவேகமாக செல்வது, பைக்கில் பயணிக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவது என பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அந்த தொடர்ச்சியாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜெயநகரில் பைக்கில் பயணம் செய்த பெண்ணை அறைந்ததாக டிரைவர் மீது புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், தாறுமாறாக வண்டியை ஓட்டியதால் பாதி வழியிலேயே இறங்கிய அவர், டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் உச்சக்கட்டத்தை எட்டியது.
தடுமாறி விழுந்த இளம்பெண்:
ஒரு கட்டத்தில் அந்த பெண் ஆங்கிலத்தில் மட்டுமே பேசி இருக்கிறார், ஓட்டுநர் கன்னடத்தில் மட்டுமே பேசினார். அந்தப் பெண், பணம் தர மறுத்து, ஹெல்மெட்டையும் திருப்பித் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, நிலைமை மோசமடைந்தது. இறுதியில், அந்த பெண்ணை டிரைவர் அறைந்துள்ளார். இதில், நிலைதடுமாறி அவர் தரையில் விழுந்துள்ளார்.
அந்தப் பெண்ணை புகார் அளிக்க அறிவுறுத்தியதாகவும், ஆனால் அவர் இந்த விஷயத்தைத் தொடர விரும்பவில்லை எனக் கூறியதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், non-cognizable report பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடந்து வருகிறது.
தட்டி கேட்டதற்கு கிடைத்த பரிசு:
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஏப்ரல் மாதத்தில் இரு சக்கர வாகன டாக்சிகளை நிறுத்தி வைக்குமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கர்நாடக சாலைகளில் பைக் டாக்சிகளை இயக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அப்போது, பைக் டாக்சிகளை வணிக வாகனங்களாக இயக்க முடியாது என்று மாநில அரசு வாதிட்டது.
இதுகுறித்து கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், "மூன்று மாதங்களுக்கு முன்பு, பைக் டாக்சிகள் இயக்குவது சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் ஆறு வாரங்கள் அவகாசம் அளித்திருந்தனர். மீண்டும், அவர்களின் வேண்டுகோளின் பேரில், அவர்கள் மேலும் ஆறு வாரங்கள் அவகாசம் அளித்துள்ளனர். இப்போது, 12 வாரங்கள் முடிந்துவிட்டன. அவர்கள், உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்ற வேண்டும்" என்றார்.