வங்க கடல் கிழக்கு பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலானது, வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றது. இப்புயலானது 110 கி.மீ முதல் 120 கி.மீ வரை வேகத்தில் சுற்றிக் கொண்டும், சுமார் 7 கி.மீ வேகத்திலும் நகர்ந்து கொண்டும் வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரெமல் புயல்:
இந்த புயலுக்கு REMAL என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரெமல் என்றால் அரபு மொழியில் மண் என்று அர்த்தம். ஓமன் நாடு இந்த பெயரை பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.
எங்கு? எப்போது?
கிழக்கு வங்க கடலில் உருவாகிய ரெமல் புயலானது, வடமேற்கு நோக்கி நகர்ந்து, மேற்கு வங்கத்துக்கும் வங்காள தேச நாட்டுக்கும் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று நள்ளிரவு சுமார் கடக்கும் என கரையை கடக்கும்.
கரையை கடக்கும் நிகழ்வானது நாளை அதிகாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது, காற்றின் வேகமானது சுமார் 120 கி.மீ முதல் 135 கி.மீ வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் பாதிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் ஆலோசனை:
இந்நிலையில், புயல் தாக்கத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருக்கும் வகையில், மேற்கு வங்க மாநில அரசு மீட்பு படையை முன்னெச்சரிக்கையாக வைத்துள்ளது. மேலும், இன்று மாலை பிரதமர் மோடி, ரெமல் சூறாவளிக்கான முன்னெச்சரிக்கை மற்றும் தயார் நிலை குறித்து ஆலோசனை கூட்டத்தை மேற்கொண்டார்
தமிழ்நாட்டில் தாக்கம்:
அடுத்த 4 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38°-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மேலும், புயல் காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்