நாட்டின் அடுத்த பிரதமரை தீர்மானிக்கப்போகும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. வரும் ஜூன் 1ஆம் தேதி, கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


ஏற்கனவே, 6 கட்ட வாக்குப்பதிவில் நாடு முழுவதும் உள்ள 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான், அஸ்ஸாம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.


இறுதி கட்டத்தில் மக்களவை தேர்தல்: வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி, 7ஆம் கட்ட வாக்குப்பதிவின்போது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 4 மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலம் என்பதால் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது.


இதற்காக காங்கிரஸ் தலைவர்கள் அங்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் சிம்லாவில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என கேள்வி முன்வைக்கப்பட்டது. 


பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய பிரபல வினாடி வினா நிகழ்ச்சியை மேற்கொள் காட்டி பதில் அளித்த காங்கிரஸ் தலைவர், "கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கேட்கும் கேள்வி போல் உள்ளது. நாங்கள் ஆட்சி அமைத்தால் யார் பிரதமர் என்பதை அனைத்து தலைவர்களும் முடிவு செய்வார்கள்.


கார்கே கூறியது என்ன? காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் தேர்தலுக்கு முன் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. 2004இல் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியை பிரதமராக்க விரும்பினர்.


ஆனால், அவர் மறுத்துவிட்டார். எங்களிடம் பெரும்பான்மை இல்லை. எங்களுக்கு 140 இடங்கள் இருந்தன. 2009இல் 209 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை அமைத்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தோம். சில சமயம் அறிவாளிகள் கூட வரலாற்றை மறந்து விடுவார்கள்.


பாஜகவை கடுமையாக சாடிய மல்லிகார்ஜுன கார்கே, "2 கோடி வேலைவாய்ப்புகள், பணவீக்கத்தை குறைப்பது குறித்து நாட்டு மக்களிடம் பாஜக பொய் சொன்னது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.


2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பெரிய வாக்குறுதிகளை அளித்தவர் பிரதமர். ஆனால், அதன் பிறகு திரும்பி கூட பார்க்கவில்லை. இமாச்சலப் பிரதேசம் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டபோது அவர் உதவவில்லை. நாட்டில் உள்ள அரசாங்கங்களை கவிழ்க்க பாஜக பாடுபடுகிறது. இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசை சீர்குலைக்க முயற்சிக்கிறது" என்றார்.