Cyclone Dana: தீவிர புயலாக மாறிய டாணா; 200 ரயில்கள் ரத்து! மூடப்படும் கொல்கத்தா விமான நிலையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள டாணா புயல் தீவிரப்புயலாக மாறியதால் 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலையமும் இன்று மூடப்படுகிறது.

Continues below advertisement

வங்கக்கடலில் உருவாகிய டாணா புயல் இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மழை பெய்து வருகிறது. இந்த புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இரண்டு மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தீவிர புயலாக மாறிய டாணா:

தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள டாணா புயல் காரணமாக காற்று 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள டாணா புயல் நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒடிசாவின் பிதர்கனிகா தேசிய பூங்கா மற்றும் தம்ரா துறைமுகம் இடையே மிக கடுமையான தாக்கம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

200 ரயில்கள் ரத்து:

டாணா புயல் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் மிக கடுமையான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. புயல் தாக்கம் மிக அதிகளவில் இருக்கும் என்ற காரணத்தால் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ரயில்வே இரு மாநிலங்களிலும் ஓடும் மற்றும் இரு மாநிலங்கள் வழியாக பிற மாநிலங்களுக்குச் செல்லும் 200க்கும் மேற்பட்ட ரயில்களை இன்று மற்றும் நாளை ரத்து செய்துள்ளது. இதில் தென்கிழக்கு ரயில்வே கீழ் இயக்கப்படும் 170க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பேசஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிழக்கு ரயில்வேக்கு கீழ் இயக்கப்படும் மின்சார உள்ளூர் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் 15 மணி நேரம் தங்களது விமான நிலைய சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 9 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும்.

மேற்கு வங்க அரசு ஏற்கனவே அந்த மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. ஒடிசாவிலும் பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வரை இரு மாநிலங்களிலும் பல பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் இடமாற்றம்:

டாணா புயலின் தாக்கம் பெரியளவில் இருக்கும் என்பதால் ஒடிசாவில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 1.14 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த புயலை எதிர்கொள்ள ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். இதற்காக மொத்தம் 56 அணிகள் மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola