வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை புயலாகவும் வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த புயலுக்கு ‘அசானி’ என பெயரிடப்பட்டுள்ளது.


தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department- IMD) முன்னதாக தெரிவித்திருந்தது. இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை ஒட்டி வடக்கு நோக்கி நகர்ந்து மார்ச் 20 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், மார்ச் 21 ஆம் தேதி சூறாவளி புயலாகவும் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, மார்ச் 20 அன்று, அந்தமான் தீவுகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். அசானி புயல் கரையை நெருங்க வாய்ப்புள்ளதால் அந்தமான் நிக்கோபார் தீவுகள் நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.


மேலும், அசானி புயல் உருவாகவுள்ள நிலையில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால்,உடனடியாக கரை திரும்புமாறு மீனவர்களை, இந்திய கடலோர காவல்படை அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில்,ஹெலிகாப்டர் மூலம் சென்று, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.