சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று பொருட்களுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி சூழலியல் துறை அமைச்சர் கோபால் ராய் வலியுறுத்தியுள்ளார்.


நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை மற்றும் அவைகளைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் 75வது சுதந்திர பெருவிழாவை ஒட்டி, சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசு ஏற்படுவதை தடுக்க, மத்திய அரசு முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சில ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு 1, ஜூலை, 2022 முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


உடனே அமல்படுத்திய டெல்லி மாநகராட்சி:


நாடு முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கருத்தில் கொண்டு டெல்லி மாநகராட்சி உடனடியாக செயல்படத் தொடங்கியது.


டெல்லி மாநகராட்சி தடையை அமல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தாமல் தவிர்க்க, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குழுக்களை உருவாக்கி வருகிறது என டெல்லி மாநகராட்சி அறிக்கை வெளியிட்டது.


அந்த அறிக்கையில், "தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் இருப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஒழிக்க டெல்லி மாநகராட்சியின் மண்டல அளவில் மொத்தம் 125 அமலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.




அடையாளம் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் பலூன்கள், கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான தெர்மாகோல், தட்டுகள், கப்கள், கண்ணாடிகள், முட்கரண்டிகள், கரண்டிகள், கத்திகள், ஸ்ட்ராக்கள், தட்டுகள், பேக்கேஜிங் படங்களுக்குப் பயன்படுத்தப்படும் இயர்பட் குச்சிகள் மற்றும் குச்சிகள் அடங்கும். அதுமட்டுமில்லாது மிட்டாய் பெட்டிகள், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள் ஆகியவையும் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.  


கெடுபிடி காட்டும் மத்திய அரசு:


இந்த பிளாஸ்டிக் தடைக்கு நாடு முழுவதும் தொழில்துறையினர் சார்பில் எதிர்ப்பு எழுந்தாலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், "தடைக்கு தயாராக தொழில்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் அரசாங்கம் போதுமான அவகாசம் அளித்துள்ளது. அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்.


டெல்லி அமைச்சர் கடிதம்:
இந்நிலையில், சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று பொருட்களுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி சூழலியல் துறை அமைச்சர் கோபால் ராய் வலியுறுத்தியுள்ளார். அக்கடிதத்தில் அவர், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஜிஎஸ்டி வரி அதிகமாக இருப்பதாகக் கூறுகின்றன. சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக்குக்கு மாற்று வேண்டும் என்று குறிப்பிடும் வேளையில் ஜிஎஸ்டி வரிச் சுமையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டாமா? அப்போது தானே உற்பத்தியாளர்கள் உற்சாகத்துடன் மாற்றத்திற்கு ஒத்துழைக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.