கொல்கத்தாவில் போதையில் பேருந்து ஓட்டிய நபர் வாகனத்தை தாறுமாறு ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பள்ளிக் குழந்தைகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர். கொல்கத்தாவின் தெற்குப் பகுதியில் இன்று காலையில் இந்த விபத்து நடந்தது.


பெஹாலாஸ் பகுல்டலா பகுதியில் இன்று காலை 8 மணியளவில் இந்த விபத்து நடந்தது. போதை ஆசாமி ஓட்டிய பேருந்து ஆட்டோரிக்‌ஷாவில் மோதியது. வரிசையாக அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சில கார்களின் மீதும் மோதியது. இதில் 4 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர். மூன்று பேர் பெரியவர்கள்.


இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் மிகவும் மெத்தனமாக காரை ஓட்டிவந்தார். காவல்துறையினர் அந்த இடத்துக்கு உடனே விரைந்தனர். ஆனால் பள்ளிக் குழந்தைகள் காயமடைந்ததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் வாகனத்தை அடித்து நொறுக்கினர். பின்னர் போலீஸார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்த 4 குழந்தைகளுக்கும் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர். குடி போதையில் பேருந்தை ஓட்டிய ஆசாமி தப்பி ஓடினார். போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். 


உலகளவில் சாலை விபத்துகளில் அதிக பேர் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முடலிடத்தில் உள்ளது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இந்தியாவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட விபத்துகளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. இருப்பினும் அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வுகளால் 2017, 2018 ஆண்டுகளை ஒப்பிடுகையில் அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் இந்தியாவில் சாலை விபத்துகள் குறைந்து வருகின்றன.


உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியல்களை எடுத்துக் கொண்டால் அதில் அமெரிக்கா முதலிடத்திலும், ஜப்பான் இரண்டாம் இடத்திலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.


டாப் 20 நாடுகள் பட்டியலில் சீனா, ஈரான், கொரியா, துருக்கி, இத்தாலி, ரஷ்யா, பிரிட்டன், கனடா, இந்தோனேசியா, ஸ்பெயின், மொராக்கோ, பிரேசில், பிரான்ஸ், பெல்ஜியம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் உள்ளன. இந்தியாவில் சாலை விபத்து நடக்க அதிகக் காரணம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதே எனக் கூறப்படுகிறது. 


கொல்கத்தாவில் இன்று காலை நடந்த விபத்திற்கும் கூட வாகன ஓட்டுநர் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியதே காரணம். இந்தியாவில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது.