பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவருக்கு வயது 40. காவல்துறையின் உயரதிகாரியான இவர் கேரளாவில் பணியாற்றி வந்தவர். இவர் கோழிக்கோடில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை கண்காணிப்பாளர் பொறுப்பு வகித்து வந்தார். விமான நிலையங்களில் நடக்கும் சட்டவிரோத கடத்தல்களை தடுப்பதே அவரது கடமை ஆகும்.


இந்த நிலையில், முனியப்பன் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்ததாக கூறப்படுகிறது. கடத்தல்காரர்களுடன் முனியப்பனுக்கு தொடர்பு இருப்பதாக சுங்கத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோழிக்கோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், சுங்கத்துறை கண்காணிப்பாளர் முனியப்பன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.




அப்போது, அவரிடம் 320 கிராம் கடத்தல் தங்கம், ரூபாய் 4 லட்சத்து 42 ஆயிரத்து 980 ரொக்கம், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் இந்தியர்கள் 4 பேரின் பாஸ்போர்ட்டுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர்.


அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. கடந்த 18-ந் தேதி அதிகாலை துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துள்ளது. அந்த விமானத்தில் காசர்கோட்டைச் சேர்ந்த அப்துல் நசீர் ( வயது 46) மற்றும் சம்ஜீத் (வயது 20) ஆகியோரும் வந்துள்ளனர். இருவரும் தலா 320 கிராம் தங்கம் கொண்டு வந்துள்ளனர். அவர்களை பிடித்து விசாரித்த முனியப்பன் இருவரில் ஒருவரிடம் இருந்த 320 கிராம் தங்கத்திற்கு மட்டும் வரி விதித்து அதற்கான ஆவணத்தை ஒப்படைத்தார். மற்றொரு நபரிடம் இருந்த 320 கிராம் தங்கத்தை முனியப்பனே பதுக்கிவிட்டார்.




பின்னர், அவர்களிடம் பதுக்கிய தங்கத்தை தானே கொண்டு வந்து ஒப்படைப்பதாகவும், அதற்கு ரூபாய் 25 ஆயிரம் அளிக்குமாறும் பேரம் பேசியுள்ளார். அவர்களிடம் கொடுப்பதற்காக தங்கத்தை பதுக்கி வைத்திருந்தபோதுதான் முனியப்பன் சிக்கிக்கொண்டார். இதையடுத்து, முனியப்பனை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முனியப்பனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. முனியப்பனிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வெளிநாடுகளில் இருந்து தங்கம், தடைசெய்யப்பட்ட பொருட்கள், அரிய வகை விலங்குகள் வான் வழியாகவும், கடல் வழியாகவும் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுப்பதற்காக மத்திய அரசும், பாதுகாப்பு படையினரும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விமான நிலையங்களில் சமீபகாலமாக ஏராளமான கடத்தல் தங்கம் பிடிபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Crime : உடலில் தீ வைத்துக்கொண்டு கல்லூரி முதல்வரை கட்டிப்பிடித்த மாணவர்.! காலேஜில் நடந்த பரபர சம்பவம்!


மேலும் படிக்க : Crime: திருடன் என சந்தேகம்... மொட்டை அடித்து, சாக்கடை சுத்தம் செய்ய வைத்து கும்பல் தாக்குதல்... அதிர்ச்சியூட்டும் வீடியோ!