திருடன் என சந்தேகிக்கப்பட்ட நபரின் தலையை மொட்டை அடித்தும், சாக்கடையை சுத்தம் செய்ய வைத்தும் உள்ளூர்வாசிகள் அடங்கிய கும்பல் சித்திரவதை செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சாக்கடை சுத்தம் செய்ய வைத்து கொடுமை


டெல்லி, வாஜிராபாத் பகுதியில் மோட்டார் ஒன்றை திருடியதாக இந்நபர் சந்தேகிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி உள்ளூர்வாசிகள் இணைந்து அந்நபரை கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கியும், அவரது தலை முடியை மழித்தும், சாக்கடையை சுத்தம் செய்ய வைத்தும் சித்திரவதை செய்துள்ளனர்.


தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த காவல் துறையினர் அந்நபரைக் கைது செய்த நிலையில், இச்சம்பவம் குறித்த அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


 






மேலும், கைதான நபரின் பெயர் சாகில் (28) எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


ராஜஸ்தான் கும்பல் தாக்குதல் சம்பவம்


முன்னதாக ராஜஸ்தானில் இதேபோல் திருடன் என நினைத்து கும்பல் தாக்குதல் செய்யப்பட்ட காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.


45 வயதான காய்கறி வியாபாரி சிரஞ்சி சைனி  ஆக.15ஆம் தேதி அல்வார் மாவட்டம், ரம்பாஸ் கிராமத்தில் காய்கறிப் பண்ணையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.


அந்த சமயத்தில் அப்பகுதியில் டிராக்டர் ஒன்று திருடு போனதை அடுத்து அதனைத் தேடி காவல் துறையினரும், மற்றொரு புறம் சில நபர்களுடன் டிராக்டர் உரிமையாளரும் வந்துள்ளார்.


இந்நிலையில் சிரஞ்சி சைனியை திருடன் எனத் தவறாக நினைத்து டிராக்டர் உரிமையாளரும் அவருடன் வந்தவர்களும் ஒன்று சேர்ந்து அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.


மற்றொருபுறம், காவலர்கள் உண்மையான திருடர்களை துரத்திச் சென்று அவர்களை நெருங்கிய நிலையில், காவலர்கள் தங்களை சுற்றி வளைத்ததை உணர்ந்து டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு திருட்டில் ஈடுபட்ட நபர்கள் தப்பியோடி உள்ளனர்.


இந்நிலையில் சைனி தாக்கப்படுவதை அறிந்து அங்கு விரைந்த காவலர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று முதலுதவி அளித்துள்ளனர்.


 






தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஆக.16ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.


முன்னதாக சிரஞ்சி சைனியின் மகன் யோகேஷ் சைனி தன் தந்தையின் மரணத்துக்கு காரணமான டிராக்டர் உரிமையாளர் விக்ரம் உள்பட இருவர் மீது புகார் அளித்துள்ளார்.


இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.