திடீரென அதி கனமழை, மேக வெடிப்புகள், வெள்ளம் ஆகியவற்றை ஏற்படுத்தும் குமுலோநிம்பஸ் மேகங்களால் கேரள மாநிலம் அச்சுறுத்தப்படவுள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குமுலோநிம்பஸ் மேகங்கள் பல அடுக்குகளைக் கொண்டவை. மேலும் அவை செங்குத்தாக இருப்பதோடு, வானம் வரை கோபுரங்களைப் போல உயர்ந்து இருப்பவை.
இந்தக் குமுலோநிம்பஸ் வகை மேகங்கள் அடர்த்தியாக மாறி வருவதாகவும் இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொச்சி அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வளிமண்டல ரேடார் ஆராய்ச்சிக்கான மேம்படுத்தப்பட்ட மையத்தின் இயக்குநர் முனைவர் அபிலாஷின் வழிகாட்டுதலோடு ஆய்வு மேற்கொண்டு வரும் ஆய்வு மாணவர் ஏ.வி.ஸ்ரீநாத் என்பவரின் ஆய்வுகளின் மூலம் இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது. மேலும், இந்தக் குமுலோநிம்பஸ் மேகங்கள் சுமார் 12 முதல் 14 கிலோமீட்டர்கள் வரை விரிவடைந்திருப்பதால், இது தற்போது கேரளாவில் பெய்து வரும் அதி கனமழையையும், மின்னல் வெட்டுக்களையும் உற்பத்தி செய்திருப்பதாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நேச்சர் போர்ட்ஃபோலியோ ஜர்னல் என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கட்டுரையில், திடீரென பெய்யும் அதி கனமழை காரணமாக சிறிது நேரத்தில் வெள்ளம் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்குப் பகுதியில் உள்ள மேகங்கள் பருவ மழையைக் குறிக்கும். எனினும், தற்போது கேரளாவின் கரையோரப் பகுதிகளில் சுமார் 12 முதல் 14 கிலோமீட்டர் வரை நீண்டுள்ள குமுலோநிம்பஸ் மேகங்கள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்குக் காரணமாக குமுலோநிம்பஸ் மேகங்களும், குறைந்த நேரத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பும் காரணம் என முந்தைய ஆய்வுகளில் குறிப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கேரளாவின் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் அதிவேக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருவதோடு, மேக வெடிப்புகளும், தீவிர மழையும் கேரளாவுக்குள் நுழைந்து வருகின்றன.
அரபிக் கடலின் தரை வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவது, தென்மேற்குப் பருவக் காற்று நகரும் வேகம் அதிகரித்து வருவது, தீவிரமாகவும் ஆழமாகவும் ஏற்பட்டு வரும் வெப்பச் சலனம் ஆகியவையும் கேரளாவில் தற்போது ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றங்களுக்குக் காரணமாகக் கருதப்படுகின்றன.
குறைந்த நேரத்தில் வெடித்துப் பெய்யும் அதி கனமழை விவசாயப் பணிகளுக்கும் உதவியாக இருப்பதில்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வகையிலான மழை என்பது மண்ணின் மேற்பகுதியில் இருக்கும் சத்துகளை உடனடியாக எடுத்துக் கொண்டு கடலில் கலந்துவிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டு மணி நேரங்களில் சுமார் 5 செண்டிமீட்டர் வரை பெய்யும் மழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.