மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோதே, பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்தது. மூன்று மாடி கட்டிடத்தின் முதல் இரண்டு மாடியில் உள்ள அறைகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் இருந்ததால் இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அரசு உதவி பெறும் பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வெடிச் சத்தம் கேட்டு பீதியடைந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறிய நிலையில், மேற்கூரைக்கு அருகில் வெடிகுண்டு ஏதேனும் சிதறி இருக்கிறதா என்பதை காண ஆசிரியர்கள் மாடிக்கு சென்றதாக திதாகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளயின் நிர்வாகக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
பராக்பூர் போலீஸ் கமிஷனரேட்டின் உயர் அலுவலர் ஒருவர், சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஒரே நாட்டு வெடிகுண்டால் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து வீசப்பட்டதா அல்லது அங்கு வைக்கப்பட்டு திடீரென வெடித்து சிதறியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்" என்றார்.
இந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என பராக்பூர் எம்பி அர்ஜூன் சிங் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
"எந்தவொரு குழந்தையாவது அந்த இடத்தைச் சுற்றி இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்து நான் நடுங்குகிறேன். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்குமாறு காவல்துறை ஆணையர் மற்றும் பாரக்பூர் காவல் ஆணையரின் மற்ற உயர் அதிகாரிகளை நான் வலியுறுத்தினேன்," என சிங் கூறியுள்ளார். இவர், கடந்த மே மாதம்தான் பாஜகவிலிருந்து திரிணாமுல் கட்சிக்கு திரும்பினார்.
பாஜகவின் ஹூக்லி எம்பி லாக்கெட் சாட்டர்ஜி இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். "மம்தா பானர்ஜியின் ஆட்சியில் பள்ளிக் குழந்தைகள் கூட பாதுகாப்பாக இல்லை. மேற்கு வங்கம் முழுவதும் வீடுகள் மற்றும் கட்சி அலுவலகங்களில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன. இன்றைய சம்பவம் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் காட்டுகிறது. மாநில காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சிபிஐ,உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்" என்றும் அவர் கூறினார்.