மத்தியப் பிரதேசத்தில் முதலை ஒன்று குழந்தையை விழுங்கியதாக நம்பிய கிராம மக்கள், அதன் வயிற்றில் இருந்து குழந்தையின் உடலை மீட்க முயற்சித்து, அதன் கால்கள், வாயை கட்டி போட்டு பிடித்து வைத்தனர்.
திங்கள்கிழமை ஷியோபூரில் தனது நண்பர்களுடன் சம்பல் ஆற்றில் குளித்தபோது அந்தர் சிங் என்ற ஏழு வயது சிறுவனை முதலை உயிருடன் விழுங்கியதாக கூறப்படுகிறது.
முதலையின் வயிற்றில் சிறுவன் உயிருடன் இருப்பதாக நம்பிய கிராம மக்கள், வயிற்றில் இருக்கும் சிறுவனிடம் பேச வாய்ப்பிருப்பதாக எண்ணி அவரின் பெயரை குறிப்பிட்டு அழைத்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள், முதலையின் வயிற்றில் சிறுவன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என விளக்கம் அளிக்க முயற்சித்தனர்.
அந்தர் சிங் குளித்துக் கொண்டிருந்த போது, முதலை அவரைத் தாக்கி, தாடையில் வைத்தபடி நீந்தி சென்றது. இதையடுத்து, உடன் இருந்த நண்பர்கள் உதவி கேட்டு கத்திய நிலையில், அந்த முதலையை வலை மூலம் பொதுமக்கள் பிடித்தனர்.
முதலை சிறுவனை விழுங்கிவிட்டதாக நம்பிய கிராம மக்கள் முதலில் அதன் கால்களைக் கட்டி, பின்னர் மெல்லாமல் இருக்க அதன் தாடைகளுக்கு இடையே ஒரு குச்சியை வைத்து கட்டினர். குழந்தையை மீட்க கிராம மக்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தி முதலையை விடுவிக்க சில மணிநேரங்கள் ஆனது. இறுதியாக, முதலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. மறுநாள் காலை ஆற்றில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டு இறுதிச் சடங்குகளுக்காக அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்