சிபிஎஸ்இ மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் வெளியாகும்வரை மாணவர் சேர்க்கைக்கு உரிய அவகாசம் தர வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.


கரோனா பெருந்தொற்றுச் சூழல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 2020ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டன. அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.


2 பருவத் தேர்வுகள்


புதிய நடைமுறையின்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2ஆவது பருவத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலக் கல்வி வாரியங்கள் தேர்வு முடிவுகளை வெளியிட்டுவிட்டன. அவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்தது.


ஜூலையில் முக்கிய நுழைவுத் தேர்வுகள்


உயர் கல்வி மாணவர் சேர்க்கை தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் உள்ளிட்ட முக்கியப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஒரே மாதத்தில், ஜூலையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகள் அனைத்தையும் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இதனால் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.




இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் வெளியாகும்வரை மாணவர் சேர்க்கைக்கு உரிய அவகாசம் தர வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுகுறித்து யூஜிசி அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் கல்லூரி முதல்வர்கள் மற்றும் இயக்குநர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.


அதில் கூறப்பட்டுள்ளதாவது:


''சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே வெளியான நிலையில், இரண்டாம் பருவத் தேர்வு முடிவுகள் இன்றும் வெளியாகவில்லை. 2ஆம் பருவத் தேர்வுவிடைத் தாள்கள் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. இறுதித் தேர்வு முடிவுகள், இரண்டு பருவத் தேர்வு முடிவுகளையும் சேர்த்து மதிப்பிட்டே வெளியாகும். இந்த நடைமுறை முடிந்து, பொதுத் தேர்வு முடிவுகளை அறிவிக்க ஒரு மாத காலம் ஆகும். 


இதற்கிடையே 2022- 23ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வெழுதிய மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்படக்கூடாது. அதனால் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகும் தங்கள் நிறுவனங்களில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி இருக்குமாறு, உயர் கல்வி நிறுவனங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் விண்ணப்பிப்பதற்கு போதிய அவகாசம் அளிப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்''. 


இவ்வாறு யூஜிசி தெரிவித்துள்ளது.