திருமண உறவில் மனைவியை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்து கொள்வதை குற்றமாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 






நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு, உச்ச நீதிமன்றத்தில் இதேபோன்ற பல மனுக்கள் நிலுவையில் இருப்பதாகவும், அவை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விசாரணைக்கு ஒன்றாக பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


மனைவியின் ஒப்புதல் இன்றி அவருடன் பாலியல் உறவு வைத்து கொண்டால் கணவருக்கு எதிராக வழக்கு தொடர முடியுமா அல்லது முடியாதா என்பது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேறு வேறு தீர்ப்புகளை வழங்கினர். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 


டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணையின் போது, ​​அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம் சார்பாக வழக்கறிஞர் கருணா நுண்டி ஆஜரானார். அப்போது, சட்டத்தில் அடிப்படையான கேள்வியை இந்த வழக்கு எழுப்பியுள்ளது என்றும் இதன் காரணமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பே தேவைப்படுகிறது என்றும் இரண்டு நீதிபதிகளும் கருத்து தெரிவித்தனர்.


இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, திருமண உறவில் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டால் அது குற்றமாக கருதப்படுவதில்லை. அதற்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கு குறித்து இந்த வழக்கு ஆராய்கிறது. திருமணமான பெண், தனது கணவரிடம் பாலியல் உறவை மறுக்க முடியுமா அப்படி, அதையும் மீறி பாலியல் உறவு வைத்து கொண்டால் அது பாலியல் வன்கொடுமையாக கருத முடியுமா என்பதுதான் தற்போது கேள்வியாக உள்ளது.


மே மாதம், இந்த வழக்கில் பிளவுபட்ட தீர்ப்பை வழங்கிய டெல்லி உயர் நீதிமன்ற அமர்வின் தலைமை நீதிபதியான ராஜீவ் ஷக்தேர், திருமண உறவில் நிகழும் பாலியல் வன்கொடுமை அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி, தண்டனையிலிருந்து அதற்கு அளிக்கப்படும் விலக்கை ரத்து செய்ய அவர் பரிந்துரைத்திருந்தார். இந்திய தண்டனை சட்டம் அமலுக்கு வந்து 162 ஆண்டுகளுக்குப் பிறகும், நீதி கேட்டு வரும் திருமணமான பெண்ணின் குரலை கேட்க மறுப்பது துயரமானது என்றும் அவர் கூறியிருந்தார்.


இருப்பினும், அமர்வில் இடம்பெற்றிருந்த மற்றொரு நீதிபதியான சி. ஹரி சங்கர், இதற்கு உடன்பட மறுத்து, நியாயமான வேறுபாட்டின் அடிப்படையிலேயே திருமண உறவில் பாலியல் வன்கொடுமைக்கு விலக்கு அளிக்கப்பட்டது என கருத்து தெரிவித்தார்.