காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்துக்கான நிதி வசூலின்போது, பணம் தர மறுத்த காய்கறி வியாபாரியை காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செல்போன் கேமராவில் பதிவு செய்யப்பட்ட இந்தச் சம்பவம் குறித்த காட்சி முன்னதாக சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஹெச்.அனீஷ் கான் உள்ளிட்ட 5 பேர் முன்னதாக ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரைக்காக பணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.


அப்போது காய்கறி கடை உரிமையாளர் எஸ் ஃபவாஸ் குன்னிகோடுவிடம் 2000 ரூபாய் பணம் கேட்டதாகவும் ஆனால் அவர் 500 ரூபாய் மட்டுமே பணம் தர முடியும் எனத் தெரிவித்ததை அடுத்து அவரது கடை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.






மேலும், இந்தக் கும்பல் கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தும், கடையில் இருந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியும் காய்கறிகளை வீசி எறிந்தும் குழப்பம் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. 






இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் ஃபவாஸ் குன்னிகோடு முன்னதாகப் புகார் அளித்த நிலையில் தற்போது இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.


கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தற்போது கொல்லம் மாவட்டத்தில் எட்டாவது நாளாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 


 






ராகுல் தொடர்ந்து ஆலப்புழா வரை பயணித்து மேலும் இரண்டு வாரங்களுக்கு கேரளாவில் நடைபயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.