பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சமீப காலமாக, தெரிந்த நபர்களாலேயே நடக்கும் குற்றச்செயல்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருந்தது.


வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்:


இந்நிலையில், வடக்கு கோவாவில் உள்ள பெர்னெமுக்கு டச்சு நாட்டில் இருந்து சுற்றுலாவுக்கு வந்த பெண்ணை அவர் தங்கியிருந்த ரிசார்ட் ஊழியர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் அபிஷேக் வர்மா. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர்
யூரிகோ.


யூரிகோவை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கத்தியால் குத்தியதாகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில், அபிஷேக் வர்மா கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று யூரிகோவை காப்பாற்ற ஒரு நபர் முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த நபரையும் தாக்கி அபிஷேக் வர்மா கத்தியால் குத்தியுள்ளார். 


இதுகுறித்து பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் நிதின் வல்சன், "வெளிநாட்டில் இருந்து சுற்றுலாவுக்காக வந்த பெண் கூடாரத்தை வாடகைக்கு எடுத்திருந்தார். அந்த கூடாரத்திற்குள், ரிசார்ட் ஊழியர் அத்துமீறி நுழைந்துபோது அந்த பெண் கூச்சலிட்டு உதவிக்கு அழைத்துள்ளார். 


உதவிக்கு வந்த கிராமவாசி:


அப்போது, உள்ளூர்வாசி ஒருவர் அப்பெண்ணை காப்பாற்ற வந்துள்ளார். அதைப்பார்த்து, அந்த ஊழியர் தப்பி ஓடிவிட்டார். ஆனால், கத்தியுடன் மீண்டும் வந்த அந்த ஊழியர், உள்ளூர்வாசியை தாக்கி, வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தார். பின்னர், அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.


தாக்குதலுக்கு உள்ளான உள்ளூர்வாசியும் பாதிக்கப்பட்ட பெண்ணும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மீட்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 452,354,307,506(II) பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.


இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.



2020ஆம் ஆண்டை தவிர, பிற ஆண்டுகளில் ஆண்டுக்கு ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்திய காவல்துறை பதிவு செய்த 60 லட்சம் குற்றங்களில் 4,28,278 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடைவை.



2016ஆம் ஆண்டு 3,38,954 வழக்குகள் என்ற நிலையில் இருந்து ஆறு ஆண்டுகளில் இது 26.35% அதிகமாகும். 2021ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ள பெரும்பாலான வழக்குகள் கடத்தல், பாலியல் வல்லுறவு, வீட்டு வன்முறை, வரதட்சணை மரணங்கள், பாலியல் தாக்குதல்கள் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.




மேலும், 107 பெண்கள் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகினர். 1,580 பெண்கள் கடத்தப்பட்டனர். 15 சிறுமிகள் விற்கப்பட்டனர். 2,668 பெண்கள் இணைய குற்றங்களில் பாதிக்கப்பட்டனர்.