மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், நாட்டின் மூத்த அரசியல்வாதியாகவும் திகழ்பவர் சீதாராம் யெச்சூரி. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சீதாராம் யெச்சூரி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐ.சி.யு. வார்டில் சீதாராம் யெச்சூரி:


மூன்று நாட்களுக்கு முன்பே சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை மோசமாக இருந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்குரிய வகையில் அமைந்துள்ளது. இதனால், அவர் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி மருத்துவமனையில் நெஞ்சு வலி மற்றும்  நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்ட சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவது மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மற்றும் மற்ற அரசியல்  கட்சித் தலைவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசம்:

72 வயதான சீதாராம் யெச்சூரியின் உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வரும் சீதாராம் யெச்சூரி விரைவில் குணம்பெற அரசியல் தலைவர்களும், தொண்டர்களும் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.


1952ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி பிறந்த சீதாராம் யெச்சூரி சென்னையில் பிறந்தவர். ஆந்திராவில் வளர்ந்த இவர் டெல்லியில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். முதுகலை பொருளாதார படிப்பை டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் முடித்த அவர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.


முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர்:


படிக்கும் காலத்தில் இருந்தே மாணவர் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்த சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்றினார். ராஜ்யசபா உறுப்பினராக 2005ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவராக திகழும் சீதாராம் யெச்சூரி, பிரபல பத்திரிகையாளர் சீமா சிஸ்தியை திருமணம் செய்துள்ளார். இவரது மகன் ஆஷிஷ் யெச்சூரி கடந்த 2021ம் ஆண்டு கொரோனாவில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகள் அகிலா வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றுகிறார்.