மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 68. புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


கேரளாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணன், உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் கடைசி வாரத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விலகினார். கேரளாவில் 2006 முதல் 2011 வரை வி.எஸ். அச்சுதானந்தன் அரசில் உள்துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த பாலகிருஷ்ணன், 2015ல் கட்சியின் மாநிலச் செயலாளராக ஆனார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொலிட்பீரோவில் உறுப்பினராக இருந்தார். 2001 முதல் 2004 வரையிலும் 2011 முதல் 2016 வரையில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணை தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.


இந்த ஆண்டு மார்ச் மாதம் கொச்சியில் நடைபெற்ற சிபிஎம் கட்சியின் மாநில மாநாட்டில், தொடர்ந்து மூன்றாவது முறையாக கட்சியின் மாநிலச் செயலாளராகத் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக எம்.வி. கோவிந்தனிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.


1982, 1987, 2001, 2006 மற்றும் 2011 ஆகிய ஐந்து முறை தலச்சேரி தொகுதியில் இருந்து மாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2019 அக்டோபரில் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார்.


இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். மே மாதம் அவர் திரும்பும் வரை மேலிடம் கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தது. 2020ல் கட்சியில் இருந்து ஓராண்டுக்கு விடுப்பு பெறுவதற்கு உடல் நலக் காரணங்களை அவர் மேற்கோள் காட்டியிருந்தார். தற்போது பொலிட்பீரோ உறுப்பினராக உள்ள விஜயராகவன், அவர் இல்லாத நேரத்தில் சிபிஎம் கட்சியின் மாநில செயலாளராக செயல்பட்டார்.


கொடியேரிக்கு சிபிஎம் தலைவரும், தலச்சேரியின் முன்னாள் எம்எல்ஏவுமான எம்.வி. ராஜகோபாலின் மகளான எஸ்.ஆர். வினோதினி என்ற மனைவியும், பினாய், பினீஷ் என்ற மகன்களும் உள்ளனர். டாக்டர் அகிலா மற்றும் ரெனீதா அவரது மருமகள்கள்.


1953 ஆம் ஆண்டு கொடியேரியில் உள்ள மோட்டும்மாளைச் சேர்ந்த கீழ்நிலைப் பள்ளி ஆசிரியர் குஞ்சுண்ணி குருப் மற்றும் நாராயணி அம்மா ஆகியோருக்குப் பிறந்த கொடியேரி பாலகிருஷ்ணன், கொடியேரியில் உள்ள ஜூனியர் பேஸிக் பள்ளி மற்றும் ஓனியன் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பள்ளிப்படிப்பை முடித்தார்.


மாஹேயில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியிலும் திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரியிலும்  தனது முன் பட்டப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பை முடித்தார். 1970இல் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரான இவர், அந்த அமைப்பின் ஈங்கயில் பீடிகை கிளைச் செயலாளராக பதவி வகித்தார்.