ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளூரில் நிறைய கார்களை தயாரிக்க வேண்டும் என்றும் அம்மாதிரியாக செய்தால் அதன் செலவு குறைவதோடு மக்கள் அதை வாங்குவது அதிகரிக்கும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


 






இந்தியாவில் முதன்முறையாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQS 580 4MATIC மின்சார வாகன கார் புனேவில் உள்ள சக்கன் தயாரிப்பு ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு விழாவில் பேசிய கட்கரி, நாட்டில் மின்சார வாகனங்களுக்கு மிகப்பெரிய சந்தை இருப்பதாகக் கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், "உற்பத்தியை அதிகப்படுத்தினால்தான் செலவைக் குறைக்க முடியும். நாங்கள் நடுத்தர வர்க்க மக்கள், உங்கள் காரை என்னால் கூட வாங்க முடியவில்லை. நாட்டில் மொத்தம் 15.7 லட்சம் பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்கள் உள்ளன. ஒட்டுமொத்த மின்சார வாகனங்களின் விற்பனை 335 சதவீதம் உயர்ந்துள்ளதால் மிகப்பெரிய சந்தை உள்ளது.


நாட்டில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள் வர உள்ளதால் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா கார்களுக்கு நல்ல சந்தை கிடைக்கும். இந்திய ஆட்டோமொபைல் துறையின் மதிப்பு தற்போது 7.8 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், ஏற்றுமதி 3.5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மேலும், இதை 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்துறையாக மாற்ற வேண்டும் என்பதே எனது கனவு.


காலவதியான வாகனங்களை அழிக்கும் யூனிட்களை நிறுவுவதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த நிறுவனம் அதன் உதிரிபாகங்களின் விலையை 30 சதவிகிதம் குறைக்க உதவும்.


எங்கள் பதிவுகளின்படி, எங்களிடம் 1.02 கோடி காலவதியான வாகனங்கள் அழிக்க தயாராக உள்ளன. எங்களிடம் 40 அலகுகள் மட்டுமே உள்ளன. ஒரு மாவட்டத்தில் நான்கு அழிக்கும் யூனிட்களை திறக்கலாம் என்பது என் கணிப்பு. மிக எளிதாக, இதுபோன்ற 2,000 யூனிட்களைத் திறக்கலாம்.


மறுசுழற்சி செய்வதற்கான மூலப்பொருட்களை உங்களுக்கு வழங்கும் சில அலகுகளை நீங்கள் அமைக்கலாம் என்பது எனது பரிந்துரையாகும். இது உங்கள் பாகங்களின் விலையை 30 சதவீதம் குறைக்கும். அரசாங்கம் அத்தகைய வசதிகளை ஊக்குவித்து வருகிறது. நாங்கள் உங்களிடமிருந்து ஒத்துழைப்பைப் பெறுவது முக்கியம்" என்றார்.


மேலும் படிக்க : PS Box Office Collection: பொன்னியின் செல்வனின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பனிங் கலெக்‌ஷன்ஸ்..!