நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கடந்த 19-ஆம் தேதி மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தலாம் என்று அறிவித்தது. அதற்கு இன்று (ஏப்ரல் 28) முதல் கோவின் தளத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று மாலை 4 மணிமுதல் கோவின் தளத்தில் தடுப்பூசிக்கான பதிவுகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்தப் பதிவு தொடங்கியது முதல் ஒரே குழப்பமாக உள்ளது. அதாவது இந்த சேவை தொடங்கிய 5 நிமிடத்திற்குள் கோவின் தளம் முடங்கியது. பின்னர் 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் செயல்பட ஆரம்பித்தது.
அப்போது மீண்டும் பதிவு செய்தவர்கள் உள்ளே சென்று தங்களுக்கான தடுப்பூசி நாளை தேர்வுசெய்ய சென்றால் அங்கு 45-க்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் என்று வந்தது. இதை கண்டு மக்கள் மீண்டும் குழப்பம் அடைந்தனர். இது சென்னை,டெல்லி, மும்பை போன்ற அனைத்து நகரங்களிலும் இதே நிலையே தொடர்ந்தது.
இது தொடர்பாக பலர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் தங்கள் பகுதியில் ஒரே ஒரு மருத்துவமனை மட்டுமே இருக்கிறது. அதிலும் 45 வயதுக்கு மேல்தான் பதிவுசெய்ய முடியும் என்று காட்டுகிறது என்று பதிவிட்டுள்ளனர்.
மேலும் சிலர் இந்த தளத்தில் பதிவுமட்டும் செய்துவிட்டேன். ஆனால் தடுப்பூசி போட நாளை தேர்வு செய்ய முடியவில்லை என்று பதிவிட்டுள்ளனர். இந்த குழப்பங்களுக்கு சற்று பதில் அளிக்கும் வகையில் ஆரோக்ய சேது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளது. அதில், “18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்று மாலை 4 மணிமுதல் தடுப்பூசிக்கு கோவின் தளத்தில் பதிவு செய்யலாம். எனினும் மே 1-ஆம் தேதி முதல் அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மையங்களின் தயார்நிலையை பொறுத்தே தடுப்பூசி மையங்களை தேர்வுசெய்ய முடியும்” எனப் பதிவிட்டுள்ளது.
இந்தப் பதிவை வைத்து பார்க்கும்போது தற்போது எந்த மாநிலங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மையங்கள் தயாராக இல்லை என்பது தெரிகிறது.