மே 1-ஆம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் அனைவரும் ஒரே நேரத்தில் குவிய வாய்ப்புள்ளது என்பதால் முன்பதிவு முறையை அறிவித்தது அரசு. அதன்படி Aarogya setu மற்றும் Umaang ஆகிய செயலிகளில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டது.




அதன்படி இன்று மாலை 4 மணி முதல் 18 வயது நிரம்பியவர்கள் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டார்கள். ஆனால் இன்று மாலை 4 மணிக்கு பல பேர் ஒரே நேரத்தில் CoWin இணையப்பக்கத்தில் குவிந்ததால் அந்த இணையப்பக்கமே முடங்கியது. 




அதைப்போலவே Aarogya setu செயலியிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்தது. முன்பதிவில் நமது தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டால் உடனடியாக OTP வரும். அதன்பின்னரே தடுப்பூசிக்கான தேதி, நேரம் குறிப்பிடுவதற்கான ஆப்ஷன் வரும். ஆனால் ஓடிபி சிக்கல் ஏற்பட்டதால் பலரும் குழப்பமடைந்தனர். பலருக்கு OTP வரவே இல்லை என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக waitingforOTP என்ற பதிவும் அதிக அளவில் ட்விட்டரில் பதிவிடப்படுகிறது.