நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கடந்த 19ஆம் தேதி மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தலாம் என்று அறிவித்தது. அதற்கு இன்று (ஏப்ரல் 28) முதல் கோவின் தளத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று மாலை 4 மணி முதல் கோவின் தளத்தில் தடுப்பூசிக்கான பதிவுகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்தப் பதிவு தொடங்கியது முதல் சில குழப்பங்கள் நீடித்தது. இதனைத் தொடர்ந்து குழப்பத்தை தீர்க்கும் வகையில் ஆரோக்கிய சேது ட்விட்டர் தளத்தில் ஒரு பதிவு இடப்பட்டது.
இந்தச் சூழலில் தற்போது வரை கோவின் தளத்தில் இன்று ஒரே நாளில் 75 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசின் இணையதளமான ‘MyGov.in’ சிஇஓ அபிஷேக் சிங் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 3 மணிநேரத்தில் 55 லட்சம் பேர் தடுப்பூசிக்கு பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில மணி நேரங்களில் 434 மில்லியன் பேர் கோவின் தளத்திற்கு வந்ததுள்ளனர். அத்துடன் தொடக்கத்தில் ஒரு சிறிய கோளாறு ஏற்பட்டது என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். கோவின் தளத்தில் பதிவு செய்வதும் தடுப்பூசிபோட்டுக் கொள்ளும் நாளை தேர்வு செய்வதும் இரண்டு விதமான நடைமுறைகள். இதில் முதலில் மொபைல் எண் மூலம் பதிவு செய்யலாம். அதன்பின்னர் ஒரு மொபைல் எண் உதவியுடன் நான்கு பேருக்கு தடுப்பூசி பதிவு செய்யலாம். இத்தளத்தில் பதிவுசெய்த பிறகு மீண்டும் உங்களுடைய தடுப்பூசி மையம் மற்றும் தடுப்பூசி போடும் நாள் ஆகியவற்றை தேர்வுசெய்ய வேண்டும்.
கோவின் தளத்தில் பதிவு செய்வதில் தொடக்கத்தில் சிக்கல் இருந்தாலும் பின்னர் அது சரி செய்யப்பட்டது. எனினும் பதிவு செய்த பிறகு தடுப்பூசி போடும் நாள் மற்றும் மையத்தை பலரால் தேர்வு செய்ய முடியவில்லை. எனவே இந்த தளத்தில் பதிவுகள் அதிகமாக இருந்தாலும் எத்தனை பேர் பதிவு செய்த பிறகு தடுப்பூசி மையம் மற்றும் நாளை தேர்வு செய்தனர் என்பது குறித்த தகவல் தெரியவில்லை.
முன்னதாக நீண்ட குழப்பத்திற்கு பிறகு ஆரோக்கிய சேது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளது. அதில், “18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்று மாலை 4 மணி முதல் தடுப்பூசிக்கு கோவின் தளத்தில் பதிவு செய்யலாம். எனினும் மே 1-ஆம் தேதி முதல் அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மையங்களின் தயார்நிலையை பொறுத்தே தடுப்பூசி மையங்களை தேர்வு செய்யமுடியும்” எனப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.