கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடுமையாக சுகாதார உள்கட்டமைப்புகள் அழுத்தத்தை சந்தித்துவரும் நிலையில், டெல்லியில் உள்ள மத்திய வழித்தடப் பகுதி மேம்பாட்டுத் திட்டப் பணிகள் அத்தியாவசிய சேவையாக (Central Vista Avenue) அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மத்திய விஸ்டா திட்டத்துக்கு பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 24,149 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 2.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டு சூழல் நிலவுகிறது. போதிய ஆக்சிஜன் விநியோகம் இல்லாத காரணத்தினால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்த மக்கள் பொதுவெளியில் எரியூட்டப்பட்டு வருகின்றனர். இந்த காட்சிகள், ஒட்டுமொத்த மனித வாழ்க்கையை கேள்வி கேட்பதாக அமைந்தது. கடந்த வாரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆக்சிஜன் தட்டுப்பாடு வழக்கில் " பிச்சை எடுங்கள், திருடுங்கள், எதையாவது செய்து உயிர்களை காப்பாற்றுங்கள்" என்று தெரிவித்தது.
கோவிட்-19 பாதிப்பை கட்டுப்படுத்த, டெல்லி அரசு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து வருகிறது. ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டும் தடையின்றி அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கட்டுமானத் துறையை பொறுத்தவரை நிறுவனங்களில் தங்கி பணிபுரியம் ஊழியர்களை கொண்டு கட்டுமானப் பணிகள் நடைபெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. டெல்லி அரசின் ஊரடங்கு கட்டுப்பாட்டு வழிமுறைகளில் இருந்து மத்திய விஸ்டா திட்டத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கில் தொடரும் பணிகள்:
ஏப்ரல் 16-ஆம் தேதி, ஒட்டுமொத்த டெல்லியும் வார இறுதி நாள் ஊரடங்கில் இருந்தபோது, மத்திய பொதுப்பணித்துறை டெல்லி காவல்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியது. அக்கடித்தத்தில், " மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் முக்கிய பணிகள் மாற்றியமைக்கப்பட உள்ளன. இதற்கான, பணிகள் ஷாபூர்ஜி பல்லோன்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் கால வரையறைக்கு உட்பட்டவை என்பதனாலும், 2021 நவம்பர் 30-ஆம் தேதிக்கு முன்னர் முடிக்கப்படவேண்டியது இருப்பதாலும், நிறுவனம் தொடர்ச்சியாக இயங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தது.
மேலும், அந்த கடிதத்தில் " ஊரடங்கு காலத்தில், சாராய் காலேகான் பகுதியில் அமைந்திருக்கும் தொழிலாளர் குடியிருப்பில் இருந்து பணியாளர்கள தங்கள் சொந்த பேருந்துகளில் அழைத்துச்செல்ல நிறுவனத்துக்கு அனுமதிதர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த 19-ஆம் தேதி ஒரு வார கால பொதுமுடக்க நிலையை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இதனையடுத்து, ஏப்ரல் 19 அன்று புதுடெல்லி காவல்துறை துணை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "சென்ட்ரல் விஸ்டா மேம்பாட்டு பணிகள் அத்தியாவசிய சேவைகள் என்றும், பணிகள் தொடர்பாக 180 வாகனங்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா நோய்த்தொற்றினால் மக்கள் பெரும் துயரங்களை சந்தித்து வரும் இவ்வேளையில், ராஜபாதைக்கு புதுப்பொலிவு கிடைக்கும் பணிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், மத்திய விஸ்டா திட்டத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள கட்டுமான ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஸ்க்ரால் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்ட்ரல் விஸ்டா திட்டம்:
20,000 கோடி மதிப்பில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம் என்றும் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய வழித்தடப் பகுதி (Central Vista Avenue) மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. நாட்டின் 75-வது சுதந்திர தினம் 2022-ஆம் ஆண்டு கொண்டாட உள்ள நிலையில், புதிய இந்தியாவின் கனவுகளை நனவாக்கும் விதத்தில் புதிய கட்டிடம் அமைய உள்ளதாக பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார்.
மத்திய வழித்தடப் பகுதிக்கான பூமி பூஜை 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. வடக்கு மற்றும் தெற்கு பிளாக் பகுதியிலிருந்து ராஜ பாதையை உள்ளடக்கிய இந்தியா கேட் வரை மற்றும் அதனையொட்டியுள்ள புல்வெளிகள், வாய்கால்கள், மரங்கள், விஜய் சவுக் மற்றும் இந்தியா கேட் பிளாசா வரை 3 கி.மீ நீள பகுதி இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுகிறது. வரும் நவம்பர் மாதம் சென்ட்ரல் விஸ்டா பணிகள் முடிவடையும் என்று கூறப்பட்டது. நாட்டின் 73-வது குடியரசு தின அணிவகுப்பை இந்திய நடத்தும்போது, ராஜபாதைக்கு புதுப்பொலிவு கிடைக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் வாசிக்க:
COVID deaths Cremation India | கொரோனா இறுதியாத்திரைகள்...எரியூட்டப்படும் உடல்கள்...! - புகைப்படங்கள்
Delhi Lockdown Extended: டெல்லியில் பொது முடக்கநிலை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு