புதுச்சேரியில் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று அனைத்து துறைகளிலும் கூறியுள்ளேன். புதுவையில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்பும்போது மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் 2021ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா இன்று நடந்தது. சமூக நலத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிக்களுக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கி முதல்வர் ரங்கசாமி, நாங்கள் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவோம். ரேஷன் கடைகளைத் திறந்து அரிசி, சர்க்கரை கொடுத்து வருகிறோம். நலிந்த பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாகத் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெள்ள நிவாரணத்தை வழங்கியுள்ளோம். அதேபோல், பயிர் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அறிவித்தபடி நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் விரைவில் வழங்கப்படும்.
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் சாலைகள் எதுவும் சீரமைக்கப்படவில்லை. தற்போதைய மழையால் கடும் சேதம் ஏற்பட்டதால் அனைத்து சாலைகளையும் புதிதாகப் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுவை முழுவதும் உள்ள சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும். அதற்கான நிதியை இப்போது ஒதுக்கியுள்ளோம். அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் கவனமாக உள்ளோம். கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
சென்டாக் மூலம் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் அரசு ஏற்கும் என்று சட்டப்பேரவையில் கூறியபடி, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பூமியான்பேட்டை லாம்போர்ட் சரவணன் நகரில் 450 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்க வேண்டிய நிலையில் உள்ளது. அந்த வீடுகள் வீடு இல்லாத பயனாளிகளுக்கு விரைவில் ஒதுக்கப்படும்.
வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று அனைத்துத் துறைகளிலும் கூறியுள்ளேன். புதுவையில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்பும்போது மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு தரப்படும். அதேபோல், வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதியை உயர்த்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் பெற்ற கடனுக்கான அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பிடிக்கக் கூடாது. இதை வங்கி மற்றும் மேம்பாட்டுக் கழகத்திடம் அறிவுறுத்துவோம். மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தில் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்வது குறித்தும் அரசு கவனத்தில் எடுக்கும் இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்