நாடாளுமன்றத்தில் 2023-2024ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. இது, ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.


இதில், அதானி விவகாரத்தை முன்வைத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சரமாரி கேள்வி எழுப்பி வருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலி ஆகியோர் நேற்று கேள்வி எழுப்பினர்.


இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பல்வேறு விவகாரங்களை முன்வைத்து பா.ஜ.க.வை கடுமையாக சாடினார். நாட்டில் வெறுப்புணர்வை பரப்புபவர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏன் அமைதி காக்கிறார்? என்று கார்கே கேள்வி எழுப்பினார்.


"நான் உண்மையைப் பேசினால் அது தேச விரோதமா? நான் தேச விரோதி இல்லை. இங்குள்ள அனைவரையும் விட நான் தேசப்பற்று உடையவன். நான் ஒரு பூமி புத்ரன். நீங்கள் நாட்டை கொள்ளையடிக்கிறீர்கள். என்னை தேச விரோதி என்கிறீர்கள். பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரின் சொத்து 2.5 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரித்துள்ளது. 2014இல் ரூ.50,000 கோடியாக இருந்தது. 2019இல் ரூ.1 லட்சம் கோடியாக அதிகரித்தது. திடீரென இரண்டு ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வந்தது என்ன மாயம்? நட்பின் பலனா?" என கார்கே தெரிவித்தார்.


மேலும், மௌனி பாபா என கார்கே குறிப்பிட்டதற்கு பாஜக எம்பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் அமளிக்கிடையே பேசிய மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தங்கர், கார்கேவின் கருத்தை கடிந்து கொண்டார்.


"நீங்க ரொம்ப மூத்த உறுப்பினர் சார். இப்படி பேசுவது தகுமா..? இந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் விவாதமாக்கக் கூடாது. எந்த வித கட்டுப்பாடும் இன்றி தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கான தளமாக மாநிலங்களவை மாற அனுமதிக்க முடியாது" என ஜகதீப் தங்கர் தெரிவித்தார்.


பின்னர், கார்கேவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "எந்த ஆதாரமும் இன்றி அவர் (கார்கே) பேசுகிறார். இது ஒரு பங்கு சந்தை கணக்கீடு. அதில் அரசாங்கத்திற்கு எந்தப் பங்கும் இல்லை. இந்த மதிப்பீடு என்ன என்பதை முன்னாள் நிதியமைச்சரிடம் இருந்து கற்றுக்கொள்ளுமாறு நான் அவரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.