உலகம் முழுவதும் காதலர்கள் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை மாடு அணைக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது.


பசு அணைப்பு தினம்


இந்தியா கலாசாரத்திலும் கிராமப்புற பொருளாதாரத்தில் மாடு வகிக்கும் முக்கிய பங்கினை மேற்கோள் காட்டும் விதமாக இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அறிவிப்பு கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், தற்போது அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. 


மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் மாடு அணைக்கும் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக இந்திய விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.


என்ன காரணம்?


யோகா தினத்தைப் போலவே, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், இந்திய விலங்குகள் நல வாரியத்துடன் இணைந்து இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக பசு அணைப்பு தினத்தை அனுசரிக்கும் முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்தது.


இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாகக் கொண்டாட வேண்டும்.


மேற்கத்திய கலாச்சாரத்தின் கடுமையான தாக்கத்தின் காரணமாக வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ளன. எனவே, நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பசு அணைப்பு தினத்தை கொண்டாடுமாறு குடிமக்களுக்கு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது" 


காதலர் தினம்:


இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரியத்தின் சட்ட ஆலோசகர் பிக்ரம் சந்திரவன்ஷி கூறுகையில், "மாடு அணைப்பு தினத்தை கொண்டாடுவதன் பின்னணியில் உள்ள குறிக்கோள், பசுக்கள் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் மீது கருணை காட்ட மக்களை ஊக்குவிப்பதே ஆகும். 


பசுக்களின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதும், மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் மெல்ல மெல்ல விலகிச் செல்பவர்களை மீட்டெடுப்பதே இதன் நோக்கம்" என்றார்.


காதலர் தினமே மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் எனக் கூறி அதற்கு எதிராக வலதுசாரிகள் தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை மக்கள் கடுமையாக விமர்சித்த நிலையில், அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.


பசுக்களைக் கட்டிப்பிடிக்கும் தினத்தை கொண்டாட வேண்டும் என்ற விலங்குகள் நல வாரியத்தின் வேண்டுகோளை கேரள பாஜக தலைவர் கே சுரேந்திரன் வரவேற்று, பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசை விட, மாநிலத்தில் உள்ள மக்களுக்கு பசுக்கள் அதிக நன்மை செய்கின்றன என தெரிவித்தார்.


இதையும் படிங்க: Cow Hug Day: ”இடதுசாரி அரசை விட பசுக்கள் அதிக நன்மை செய்கின்றன”.. கேரள பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து..