மிக அரிதான சந்தர்ப்பங்களில் தாங்கள் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசியானது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவிஷீல்ட் தொடர்பாக பரவும் செய்தி:


அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகளை தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தன. கோவிஷீல்ட் மற்றும் வாக்ஸ்செவ்ரியா என்ற பெயர்களில் இந்த தடுப்பூசிகள் உலகளவில் விற்கப்பட்டன்.


இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் தடுப்பூசிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டன. கடந்த 2021ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெற்ற பிறகு, மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.


இச்சூழலில், கோவிட்ஷீல்ட் தடுப்பூசி தொடர்பாக அறிக்கை ஒன்றை அஸ்ட்ராஜெனெகா நிறுவனமானது நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அரிதான சந்தர்ப்பங்களில் த்ரோம்போசைட்டோபீனியா நோய்க்குறி (TTS) ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.


டிடிஎஸ் என்றால் என்ன? அது எவ்வளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்? 


அதாவது, ரத்தம் உறைவது, ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறைவது போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்று அந்த அறிக்கையில தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், கோவிட்ஷீல்ட் செலுத்திய மக்கள் உலகளவில் அச்சத்தில் உள்ளனர்.


இந்தியாவை பொறுத்தவரையில்,  அஸ்ட்ராஜெனெகாவின் இந்தியப் பதிப்பான கோவிஷீல்டில் 1.75 பில்லியன் (175 கோடி) டோஸ்கள் செலுத்தப்பட்டன. இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியானது புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்படுகிறது.


கோவிஷீல்ட் பக்க விளைவுகள் தொடர்பான செய்தி வெளியானதில் இருந்து, இந்தியர்களுக்கு TTS நோய்க்குறி ஏற்படும் அபாயத்தில் இருப்பதாக சமூக ஊடக பயனர்கள் கூறி வருகின்றனர். நாட்டில் கோவிஷீல்டை அனுமதித்ததற்காக இந்திய அரசாங்கத்தை அவர்கள் குற்றம் சாட்டு வருகிறார்கள்.


ஆனால், இதில் உண்மை இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. முதலில் ‘த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம்’ அல்லது டிடிஎஸ் என்றால் என்ன, அதில் உடலில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்வோம்.


சுகாதாரம் தொடர்பான பொய் செய்திகளை அம்பலப்படுத்தும் உண்மை கண்டறியும் இணையதளமான The Healthy Indian Project-இல் இதுகுறித்து மருத்துவர் சௌமியா சலுஜா குறிப்பிடுகையில், "கொரோனா காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அடினோவைரஸ் வெக்டர் தடுப்பூசிகளே இந்த நிலைக்கு காரணம்.


மார்பு வலி, மூச்சுத் திணறல், கால்களில் வீக்கம், வயிற்று வலி, கடுமையான மற்றும் தொடர்ச்சியான தலைவலி உள்ளிட்டவையே TTS-இன் அறிகுறிகள் ஆகும். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எளிதில் சிராய்ப்புகள் ஏற்படலாம்" என்றார்.


கோவிஷீல்ட் தடுப்பூசியால் டிடிஎஸ் ஏற்படுமா?


கோவிஷீல்ட் தடுப்பூசியானது பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. மிக மிக அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே மோசமான பக்க விளைவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.


SARS-CoV-2 நோய் பரவும் நாடுகளில் தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளை காட்டிலும் அதன் பலன்கள் அதிகம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.