கொரோனா வைரசின் இரண்டாம் அலை நாடு முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஓரளவு நாடு முழுவதும் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி உள்பட அனைத்து தலைவர்களும், சுகாதாரத்துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.


இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளுக்கான அடிப்படை விலையை நிர்ணயித்துள்ளது.


இதுதொடர்பாக, மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ரூபாய் 780-ஆகவும், கோவாக்சின் தடுப்பூசிக்கு ரூபாய் 1,140-ஆகவும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ரூபாய் 1,145 ரூபாயும் விலை நிர்ணயம் செய்துள்ளது. ஸ்புட்னிக் தடுப்பூசி தமிழ்நாட்டில் இந்த மாத நடுப்பகுதியில் இருந்துதான் பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்புட்னிக் தடுப்பூசி ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலமாக இன்று சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையை அடுத்த பெரிய பனிச்சேரியில் உள்ள ஆய்வகத்திற்கு தடுப்பூசிகள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் அதிகளவு கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டமாக திகழும் கோவை மாவட்டத்திற்கு ஒரு பெட்டி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மட்டுமே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த மாதம் முதல் விரைவில் ஸ்புட்னிக் தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் பலரும் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமாக தடுப்பூசி மையத்திற்கு செல்லும் நிலையில், பல இடங்களில் தடுப்பூசிகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் திரும்பி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு இன்னும் சில நாட்களில் மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் வந்து சேரும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கூறியுள்ளார்.