சென்னை உயர்நீதிமன்றம் நாட்டிலுள்ள மிகவும் முக்கியமான உயர்நீதிமன்றங்களில் ஒன்று. சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 75 நீதிபதிகள் வரை பணியாற்ற முடியும். இருப்பினும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியை சேர்த்து 59 நீதிபதிகள் பணியில் உள்ளனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக இரண்டு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பாணையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 224(1)-ன்படி குடியரசு தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நிடுமொலு மாலா மற்றும் எஸ்.சவுந்தர் ஆகிய இருவரையும் கூடுதல் நீதிபதிகளாக நியமித்துள்ளார். அவர்கள் இருவரும் பணியை ஏற்கும் நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவரின் பெயரை உச்சநீதிமன்றத்தின் கோலிஜியம் கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி பரிந்துரை செய்திருந்தது. இந்தச் சூழலில் தற்போது அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 224(1)ன்படி குடியரசுத் தலைவர் ஒரு உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளை நியமிக்க முடியும். அவ்வாறு நியமனம் செய்யப்படும் நீதிபதிகள் பதவியேற்கும் நாளில் இருந்து 2 வருடங்கள் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற முடியும். அவர்கள் அந்த சமயம் முழுவதும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்