Covid JN.1 Variant: கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. 


மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா:


கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து, கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது. அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது.  இந்ந நிலையில், நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு ஜேஎன் 1 வகை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஜேஎன் 1 வகை கொரோனா தொற்றால் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  


குறிப்பாக தென் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு  கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.  கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகா மற்றம் சண்டிகரில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 


7 மாதங்களில் இல்லாத உச்சம்:


இதற்கிடையில், இந்தியாவில் நேற்று வியாழன்கிழமை மட்டும் புதிதாக 752 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கேரளாவில் மட்டும் 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து, கர்நாடகாவில் 70 பேருக்கும், மகாராஷ்டிராவில் 15 பேருக்கும், தமிழ்நாட்டில் 13 பேருக்கும், குஜராத்தில் 12 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,420 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 






கேரளாவில் இரண்டு பேரும், ராஜஸ்தான், கர்நாடகாவில் தலா ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,33,332 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா இறப்பு விகிதம் 1.18 சதவீதமாக உள்ளது.   இது தவிர, கடந்த 24 மணி நேரத்தில் 325 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம்கெ மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,71,212 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. 


ஜேஎன் 1 புதிய வகை கொரோனா கண்டறியப்பட்ட பிறகு, நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க  வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார செயலாளர் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Chandrababu Naidu: ஆட்சியை பிடிக்க சந்திரபாபு நாயுடு யாகம்..! அதிரடி திட்டங்களுடன் ஜெகன் மோகன் - ஆந்திர அரசியல் கள நிலவரம்