குஜராத் அரசு புதிதாக உருவாக்கப்பட்ட GIFT நகரம் (குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டிக்குள்) முழுவதும் மது அருந்த அனுமதி வழங்கியுள்ளது. உலகளாவிய வணிக சூழலை வழங்குவதற்கான நோக்கத்தை மேற்கோள் காட்டி, குஜராத் அரசாங்கம் இந்த பகுதிக்கு சில நிபந்தனைகளுடன் மது அருந்த அனுமதி வழங்கியுள்ளது. குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டிக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், “புதிய அமைப்பின் கீழ், GIFT சிட்டி பகுதியில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகளில் (தற்போது இருப்பவை மற்றும் புதிதாக வரக்கூடிய கிளப்புகளும் சேர்த்து) மது மற்றும் உணவு வசதிகளுக்கான அனுமதி வழங்கப்படும். GIFT சிட்டி பகுதியில் அதிகாரப்பூர்வமாக பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களின் அதிகாரப்பூர்வ விருந்தினர்கள் இந்த வசதியை பெற முடியும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்கள் அந்த நிறுவனத்தின் நிரந்தர பணியாளர்கள் முன்னிலையில், தற்காலிக அனுமதி பெற்ற நிறுவனங்களில் மது அருந்த அனுமதிக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது என்றும், அத்தகைய நிறுவனங்கள் மக்களுக்கு மதுபாட்டில்களை விற்க அனுமதிக்கப்படாது என்றும், நகரத்தில் மதுபானங்களின் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனை ஆகியவை மாநில மதுவிலக்கு மற்றும் கலால் துறையால் கட்டுப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
GIFT-IFSC என்பது வரி-நடுநிலை நிதி மையமாகும், இது சிங்கப்பூர் போன்ற வணிக குழுமத்திற்கு நிகராக கொண்டுவர வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது நிதி ஊக்கத்தொகை மற்றும் தளர்வான ஒழுங்குமுறை சூழலை வழங்குகிறது. 886 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த கிஃப்ட் சிட்டி, 261 ஏக்கர் மல்டி சர்வீஸ் ஸ்பெஷல் எகனாமிக் மண்டலம் (SEZ) மற்றும் 625 ஏக்கர் உள்நாட்டு கட்டணப் பகுதி (DTA Domestic Tariff Area) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது நாட்டின் முதல் சர்வதேச நிதிச் சேவை மையத்தையும் (IFSC) கொண்டுள்ளது.
இந்த பகுதியில் மது அருந்த அனுமதி வழங்கியது எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர் மணீஷ் தோஷி மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேலின் சொந்த ஊரான குஜராத்தில் மது விற்பனை மற்றும் நுகர்வை சட்டப்பூர்வமாக்கியதன் மூலம் பாஜக இரட்டைத் தரத்தை வெளிப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். மேலும், “மதுபானம் தாராளமாக கிடைக்கும் மாநிலங்களில் பெண்களின் நிலையைப் பாருங்கள். மதுவால் குடும்பங்கள் சீர்குலைந்து போகிறது. மதுபானம் ஆரோக்கியத்தை கெடுப்பது மட்டுமின்றி சமூக கட்டமைப்பையும் சீர்குலைக்கிறது. மதுவினால் வளர்ச்சி அடைய முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அது உண்மையாக இருந்தால், மது விற்பனைக்கு தடை இல்லாத மாநிலங்களின் வளர்ச்சி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.