மத்திய அரசு அறிவித்துள்ள பூஸ்டர் தடுப்பூசி குறித்து காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. 


உருமாறிய கொரோனாவாக உருவெடுத்துள்ள ஒமிக்ரான் வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் பொருட்டு பிரதமர் மோடி அதிகாரிகளுடனும் நிபுனர்களுடனும் ஆலோசனை நடத்தினார். பின்னர், மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியாவில் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுடைய சிறுவர் சிறுமியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அதே போல ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். முதற்கட்டமாக மருத்துவபணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்” என்று பேசினார். 




மேலும் “ஒமிக்ரான் தொற்று குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார் . உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார். 


இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பூஸ்டர் தடுப்பூசி அதே கோவிஷீல்டு தடுப்பூசியாக இருக்க முடியாது என்று நம்புகிறேன். நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 94 கோடி பேருக்கும் முதல் தவணை தடுப்பூசியை முன்பு கூறியது போல் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் செலுத்த முடியாது. ஏராளமானோர் இன்னும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை. இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது” என விமர்சித்துள்ளார். 


மேலும் “தடுப்பூசி தயாரிப்பு, விநியோகத்தில் குறைபாடு, தாமதமான நிதி வழங்குதல், ஃபைசர் மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்காதது உள்ளிட்டவற்றால் இழப்பை சந்தித்து வருகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் “உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பை கேள்வி எழுப்பி மக்களை அச்சப்படுத்தினார்கள். இப்போது ஒமிக்ரான் தடுப்புக்கு மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் காங்கிரஸ் கட்சிக்கு திருப்தி அளிக்கவில்லை. மற்றவர்களை வேதனையில் சுகம் அனுபவிக்கும் போக்கை அக்கட்சி கைவிட வேண்டும். வளர்ந்த நாடுகளே தடுப்பூசியை பயன்படுத்திதான் ஒமிக்ரானை எதிர்கொண்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் தடுப்பூசிகளை லாபத்துக்கு விற்றதை நினைவு படுத்த விரும்புகிறேன். பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போரை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.  




இதனிடையே மத்திய அரசு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில், 15 - 18 வயதுடைய குழந்தைகளுக்கு 2022 ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும். 15 வயது நிறைவடைந்தோர் அல்லது 2007ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.  பொதுவாக, அனைத்து பயனாளிகளும் ஆன்லைனில் பதிவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள் மற்றும் எவ்வித அசவுகரியமும் ஏற்படாமல் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முன்கூட்டியே தடுப்பூசிக்கு சரியாகத் திட்டமிடலாம். இருப்பினும், அருகில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு நேரடியாகச் சென்றும் (walks-in) தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.   15 - 18 வயதுடைய பயனாளிகளுக்கு  கோவாக்சின் தடுப்பு மருந்து மட்டுமே செலுத்தப்படும்.  ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்கள் பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். 2022 ஜனவரி 10ஆம் தேதி முதல், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்படும். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், 60 வயதுக்கு மேற்பட்ட, இணைநோயுடன் கூடிய முதியவர்களுக்கும் ஜனவரி 10ஆம் தேதி முதல் செலுத்தப்படும். இரண்டாம் தடுப்பூசி செலுத்தி 39 வாரங்கள் (9 மாதங்கள்) முடிவடைந்த  பயனாளிகள் (சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர்) தற்போது முன்னெச்சரிக்கை தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம்.  (நீங்கள் இரண்டாவது தவணையை எந்த தேதியில் போட்டுக்கொண்டீர்களோ அதில் இருந்து 9 மாதங்கள்) 36 வார இடைவெளியை கடந்த அனைத்து பயனாளிகளுக்கும் கோ-வின் தளத்தில் இருந்து குறுந்தகவல் அனுப்பப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.