இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 4.12 லட்சம், நேற்று 4.14 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 4.10 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால், ஒருநாள் உயிரிழப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 81.77 சதவீதம் மற்றும் உயிரிழப்பு விகிதம் 1.10 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 37 லட்சத்து 23 ஆயிரத்து 446-ஆக உயர்ந்துள்ளது.
ஒரேநாளில் 78 ஆயிரத்து 282 பேர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 16 கோடியே 73 லட்சத்து 46 ஆயிரத்து 544 பேருக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த சிலருக்கு கருப்பு பூஞ்சை என்ற பூஞ்சை தொற்று தாக்குதலும் ஏற்படுவதாக டெல்லி மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட சிலருக்கு இந்த பூஞ்சை தொற்று ஏற்படுவதாகவும் இதனால் பார்வை குறைபாடு உண்டாகிறது எனவும் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.
டெல்லியில் நடப்பது என்ன?
டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனை பூஞ்சை தொற்று குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு பூஞ்சை தொற்று ஏற்படுவதாகவும் இரண்டு நாட்களில் 6 பேர் அதற்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர் முஞ்சால்,கொரோனாவால் இந்த பூஞ்சை தொற்று மேலும் வேகமெடுப்பதை பார்க்க முடிகிறது.இரண்டு நாட்களில் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த வருடமும் இந்த தொற்று பலரையும் பாதித்தது. பலருக்கு கண்பார்வை சிக்கலானது என்றார்.
பூஞ்சை தொற்று என்பது என்ன?
Mucormycisis என்ற ஒரு வகை பூஞ்சை தொற்று ஆகும். இது கொரோனா வைரசால் தூண்டப்படுகிறது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாள் படுக்கையிலேயே சிகிச்சையில் உள்ளவர்களுக்கு இந்த பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நோயாளிகளை எளிதில் கண்டுபிடித்து அவர்களை பூஞ்சை தொற்று பாதிக்கிறது. இது நுரையீரலை பாதிக்கிறது. அடிபட்ட காயங்கள், வெட்டுக்காயங்கள் மூலம் இந்த பூஞ்சை தொற்று உடலுக்குள் நுழைகிறது.
அறிகுறிகள் என்ன?
மூக்கு அடைப்பு, கண்கள் அல்லது கன்னங்களில் வீக்கம் போன்றவை இந்த பூஞ்சை தொற்றில் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதனை கவனிக்காமல் விட்டால் 15 நாட்களில் மூளையைத் தாக்கி இறப்புக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரொனா பாதித்து குணமடைந்தவர்களுக்கு இதுபோல அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உடலில் உள்ள திசுக்களை பரிசோதித்து பூஞ்சை தொற்றுக்கு எதிரான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை குறை வைக்கிறது இந்த பூஞ்சை தொற்று. குறிப்பாக கொரோனாவில் இருந்து மீண்ட ஆனால் நீரிழிவு, சிறுநீரகம் அல்லது இதய செயலிழப்பு அல்லது புற்றுநோய் போன்ற பிற உடல்நிலை பாதிப்பை கொண்டவர்களில் இந்த தொற்று பொதுவாகப் பாதிக்கிறது.