கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் தீவிரமாக உள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய மாநில அரசுகள் முனைப்புகாட்டி வருகின்றனர். இந்த மாதம் 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் தற்போது மீண்டும் தடுப்பூசியின் வருகை அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டில் நாளை முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. 


இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தேசிய வல்லுநர்கள் குழு பரிந்துரையின்படி தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான புதிய நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதை மத்திய சுகாதாரத் துறை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி:



  • கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நபர்கள் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 3 மாதங்கள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது. 

  • அதேபோல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு பிளாஸ்மா சிகிச்சை செய்து கொண்ட நபர்களுக்கும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிய மூன்று மாதங்கள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளக்கூடாது. 

  • முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடுவதற்குள் கொரோனா தொற்று ஏற்பட்டால், குணமாகி மூன்று மாதங்களுக்கு பின்புதான் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். 

  • வேறு நோய்கள் காரணமாக ஐசியூ வரை சிகிச்சை பெற்றவர்கள் 4 முதல் 8 வாரம் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளக்கூடாது. 





  • மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பிக்கு பின்பு நெகட்டிவ் பெற்றவர்கள் 14 நாட்களுக்கு பிறகு இரத்த தானம் செய்யலாம்.

  • அத்துடன் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.

  • கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை.

  • கர்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான முடிவு குறித்து வல்லுநர்கள் குழு பரிசீலித்து வருகிறது. 


இந்த புதிய நெறிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் மக்களிடம் தங்களது மொழிகளில் சென்று சேர்க்கவேண்டும் என்று மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோவிஷீல்ட் தடுப்பூசி முதல் டோஸ்  செலுத்தியவர்கள் இரண்டாவது டோஸை 12-18 வாரங்களுக்கு பிறகு செலுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.