நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 402 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, டில்லியில் நேற்றும், இன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  நாளை அதிகாலை ஐந்து மணி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கில், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், கடந்த 4-ம் தேதி தொடங்கி 8-ம் தேதிவரை நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1, 409 பணியாளர்களில் 402 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த மாத இறுதியில் கூடப்படும் நிலையில், இந்த செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 




பொதுவாக, பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கும். அன்றைய தினத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.  பிப்ரவரி 1ம் தேதி மக்களவையில் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.  இரண்டு கட்டங்களாக நடைபெறும்  பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி மார்ச் முதல் வாரம் வரையிலும், இரண்டாம் பகுதி மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரையிலும் நடைபெறும். 


இதற்கிடையே, நாடாளுமன்ற பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பாதிப்பு குறித்து குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கைய்யா நாயுடு ஆலோசனை மேற்கொண்டார். அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கவும், தொற்று மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், மூத்த அலுவல் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 




இதற்கிடையே,கொரோனா மற்றும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா,  நித்தி ஆயோக் உறுப்பினர்(சுகதாரம்) டாக்டர் வி.கே.பால்,  உள்துறை செயலாளர் ஏ.கே.பல்லா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர்  ராஜேஷ் பூஷன்,  உயிரித் தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


PM Modi Meeting: தீவிரமாக பரவும் ஒமிக்ரான்: பிரதமர் தலைமையில் இன்று உயர்மட்டக் கூட்டம்




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண