வன்முறையைத் தூண்டும் வெறுப்பு பேச்சுகள் நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைத்து விடும் என ஐஐஎம் உயர்க்கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணாக்கர்கள் மற்றும் ஆசிரயர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.  


நாட்டில், சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொறுபற்ற வெறுப்பு பிரச்சாரங்களை  கடிதம் சுட்டிக் காட்டியுள்ளது. இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு  களங்கம் ஏற்படுத்த முடிவு செய்திருப்போருக்கு சாதகமாக பிரதமரின் மவுனம் அமைந்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


183 பேர் கையொப்பமிட்ட இந்த கடிதத்தில், 5 ஐஐஎம் பெங்களூர் பேராசிரயர்களும், 3 ஐஐஎம் அகமதாபாத்  பேராசிரயர்களும் அடங்குவர்.  


அந்த கடிதத்தில், " நம்மை பிரிக்கும் சக்திகளை வலுவானதாக இருக்க விடக் கூடாது. இதன் அடிப்படையில், உள்நோக்கிச் சிந்தித்து, பயனுள்ள நடவடிக்கைகளை உங்கள் தலைமை மேற்கொள்ள வேண்டும் . ஒரு சமூகம் தனது சுயாதீன உள்ளடக்கம், படைப்பாற்றல் மற்றும் புதுமை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தனக்குள்ளேயே பிளவுகளை உருவாக்க அனுமதிக்கக் கூடாது. அனைவரையும் உள்ளடக்கிய, பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை உருவாக்குவதில் உலகிற்கு இந்தியா முன்மாதிரியாக இருக்க வேண்டும். இந்த பாதையில் நாட்டை வழிநடத்துவீர்கள் என்று இதயப்பூர்வமாக நம்பிக்கை கொள்கிறாம். அதற்காக, பிரார்த்தனை செய்கிறோம்" என்றும் கூறப்பட்டுள்ளது. 


வெறுப்பு பேச்சு:    


நாட்டில் முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சொல்லாடல் ஆதிக்கம் பெற்று வருகிறது. 


முன்னதாக, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த டிசம்பர் 17 முதல் 19  வரை மூன்று நாட்கள்  நடைபெற்ற தரம் சன்சத் என்ற இந்துமத மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்து அமைப்புகளைச் சேர்ந்த மதவாதிகள் அத்தனை பேரும் குறுகிய நோக்கில் பாரபட்சமான, அருவருக்கத்தக்க கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்


மாநாட்டில் பேசிய இந்துத்துவ ஆதரவாளர்  நரசிங்கானந்த், '2029-ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக ஒரு இஸ்லாமியர்' என்ற கருப்பொருள்தான் இந்த மாநாட்டின் முக்கியமான விஷயம். இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த,  ஏழெட்டு ஆண்டுகளில் சாலைகளின் நாம் பார்க்கக்கூடிய  மனிதர்களெல்லாம் இஸ்லாமியராகத்தான் இருக்கமுடியும். 



 


2029-ஆம் ஆண்டில் இஸ்லாமியர் ஒருவர் நாட்டின் பிரதமரானால் என்ன நடக்கும்? இஸ்லாத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இதற்கு பதில் கிடைக்கும். நாட்டைக் கைப்பற்றிய 20 ஆண்டுகளில் 50% இந்துக்கள் மதம் மாற்றப்படுவார்கள், 40% இந்துக்கள் கொலை செய்யப்படுவார்கள். எஞ்சிய 10% பேரும் அமெரிக்கா, கனடா, லண்டன், ஐரோப்பா (அ) இந்தியாவில் உள்ள ஐநா அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். மடங்கள் இருக்காது, கோவில்கள் இருக்காது.  தாய்மார்களும், சகோதரிகளும் பாலியல் வல்லுறவுக்காக சந்தையில் விற்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.  


தேஜஸ்வி சூர்யா:  


டிசம்பர்  கடைசி வாரத்தில், பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா அமைப்பு (தேசிய இளைஞர் அணி ) 'இந்துமதம் புத்துயிர்' என்ற தலைப்பில் கூட்டத்தில் பேசிய பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா," இந்தியாவில் வேறு மதங்களுக்கு சென்ற கிறித்தவ, இஸ்லாமியர்கள் அனைவரையும் இந்து மதத்திற்கு திரும்பச் செய்ய வேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகளை தொடர வேண்டியது நமது கடமை. மேலும், அண்டை நாடான  பாகிஸ்தானில் மதம்மாற்ற செய்யப்பட்ட இந்து மக்களையும் நமது  வட்டத்திற்க்குள் கொண்டு வர வேண்டும். 




அனைத்து வகையான சவால்களை சரிசெய்ய, மக்கள் அனைவரையும் இந்த மதத்துக்குள் கொண்டு வருவதே ஒரே வழி.  மடங்களும், கோயில்களும் இலக்கு நிர்ணயித்து மிகப்பெரிய அளவிலான தாய் மதம் திரும்புதலை (Ghar Whapsi) செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார். பிறகு சர்ச்சை எழுந்ததும் அதை வாபஸும் பெற்றார். 


கிறித்தவக் குழுக்கள் மீது தாக்குதல் : 


கர்நாடகாவில் செயல்படும் அநேக கிறிஸ்த்துவ தேவாலயங்கள் திட்டமிட்டு மதமாற்றத்தில் ஈடுபடுவதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, மதரீதியாக சிறுபான்மையின மக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அங்கு அதிகரித்து காணப்படுகின்றன. குறிப்பாக, கிறிஸ்தவ போதர்களுக்கும் பிரார்த்தனை கூட்டங்களில் பங்குபெறுவோருக்கும் எதிரான வன்செயல் சம்பவங்களை Association for Protection of Civil Rights அமைப்பு வெளியிட்ட உண்மை கண்டறியும் அறிக்கை ஆவணப்படுத்தியது.