கொரோனா மற்றும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா,  நித்தி ஆயோக் உறுப்பினர்(சுகதாரம்) டாக்டர் வி.கே.பால்,  உள்துறை செயலாளர் ஏ.கே.பல்லா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர்  ராஜேஷ் பூஷன்,  உயிரித் தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


புதிய மருந்துப் பொருட்கள் எளிதில் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது , தற்போது தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவது, சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, தடுப்பூசி செலுத்துவதில் அதிக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.   


கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 224 நாட்களுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட ஒருநாள் அதிகப்டச பாதிப்பாகும்.  கடந்த 24 மணி நேரத்தில் 40,863 பேர் குணமடைந்துள்ளனர். இதன், காரணமாக தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5,90,611 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஏழு நாட்களில் மட்டும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 500%க்கும் அதிகரித்துள்ளது.    



 


கொரோனா நோய் பரவல் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் இன்று ஒரு நாள் பொது முடக்கநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 




வாராந்திர பாதிப்பு விகிதம் 6.77 சதவீதம் ஆகும்




முன்னதாக, சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், தற்போது வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ், இதுவரை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வந்த டெல்டா  ரக வைரஸை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவிடும் வல்லமை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே சமயம் டெல்டா பாதிப்பு காரணமாக பெற்ற  நோய் எதிர்ப்பு சக்திகள், அதிக உருமாற்றம் கொண்ட ஒமிக்ரான் வைரஸை அங்கீகரிக்கவில்லை என்ற கூறப்படுகிறது. எனவே, இரண்டாவது அலையில்  டெல்டா தோற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் ஒமிக்ரான் தொற்றில் இருந்து எந்த பாதுகாப்பையும் பெற முடியாது என்று கூறப்படுகிறது.       


தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, தில்லி, கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 27 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 3,623 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 1,409 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்/ அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 1009 பேருக்கும், தில்லியில் 513 பேருக்கும், தொற்று ஏற்பட்டு தில்லியில் 57 பேரும், மகாராஷ்டிராவில் 439 பேரும் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 185 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 185.