இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வாரத்தின் கடைசி நாட்களில் ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 


இந்நிலையில்  இந்தியாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை எப்போது முடிவிற்கு வரும் என்பது தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வை பெங்களூருவிலுள்ள ஐஐஎஸ்சி மற்றும் ஐஎஸ்ஐ அமைப்புகள் சேர்ந்து நடத்தியது. அந்த ஆய்வின்படி, இந்தியாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை வரும் ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் உச்சத்தை தொடும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா பரவல் உச்சத்திற்கு வரும் நாட்கள் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் எத்தனை பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் மற்றும் எத்தனை பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்பதை பொருத்து இது அமையும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.




அதன்படி டெல்லியில் கொரோனா பரவல் வரும் ஜனவரி கடைசி வாரத்தில் மிகவும் உச்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சத்தை தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தடுப்பூசி தரவுகளை வைத்து பார்க்கும் போது கொரோனா பரவல் உச்சத்தை எட்டும் போது ஒருநாள் பாதிப்பு 3 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் உச்சத்தை தொட்ட பிறகு கொரோனா பரவல் மிகவும் வேகமாக குறைய தொடங்கும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. 


இந்த ஆய்வின் முடிவுகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக்கத்தின் கோவிட் ட்ராக்கர் என்ற ஆய்வும் உறுதி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. அந்த ஆய்வின்படி இந்தியாவில் இந்தாண்டு கொரோனா பரவல் மிகவும் குறைவான நாட்களில் உச்சத்தை தொட்டு பின்பு குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2021ஆம் ஆண்டு பரவலை போல் இம்முறை கொரோனா பரவல் இந்தியாவில் சில மாதங்கள் நீடிக்காது என்று வல்லுநர்கள் அந்த ஆய்வில் கூறியிருந்தனர். இதேபோல் ஐஐடி-கான்பூர் நடத்திய ஆய்விலும் இந்தியாவில் கொரோனா பரவல் வரும் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி உச்சத்தை தொடும் எனக் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: எச்சரித்த விநியோகிஸ்தர்கள் சங்கம்... பணிந்தது கோல்கேட் பால்மோலிவ் நிறுவனம்