பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட  பாதுகாப்பு குறைபாடு குறித்து விசராணை நடத்துவதற்கு  அமைக்கப்பட்ட குழுக்கள் வரும் திங்கட்கிழமை வரை செயல்பட வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.


முன்னதாக, Lawyer's Voice என்ற தன்னார்வ அமைப்பு, பஞ்சாபில் பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. 


தனது மனுவில், " பிரதமர் பாதுகாப்பு விவகாரத்தில் அம்மாநில அரசும், தலைமைச் செயலாளரும் பொறுபேற்க வேண்டும். பிரதமரின் வாகன அணிவகுப்பு மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரர்கள் சிலர் சாலையை மறித்திருக்கும் காணொளி காட்சி அதிர்ச்சியளிக்கிறது. நாட்டின் உயரிய அரசியலமைப்புப்  பதவியில் இருக்கும் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது. பொறுப்பைத் தட்டிக் கழித்த தலைமைச் செயலாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தது. 


மேலும், "இந்த விவகாரம் ஒரு மாநிலத்தின் பொதுவாக நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக கருத முடியாது. தேசிய பாதுகாப்பு அம்சங்களோடு இது தொடர்புடையது. எனவே, பாதுகாப்பு விதிமீறல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பஞ்சாப் அரசு அமைத்த விசாரணை குழுவை நிறுத்தி வைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தது.


இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யா காண்ட், ஹிமால் கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை அவசர வழக்காக இன்று எடுத்து விசாரித்தது.  


மனுதாரர் தரப்பில் ஆஜாரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங், பஞ்சாப் அரசு அமைத்த விசாரணைக் குழுவில் உள்ள பல்வேறு முரண்பாடுகளை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.  




 


பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மெஹ்தாப் கில், “உள்துறை முதன்மை செயலாளர்,  அனுராக் வர்மா ஆகியோரைக்  கொண்டு விசாரணை குழுவை பஞ்சாப் அரசு அமைத்துள்ளது. முன்னாள் நீதிபதி மெஹ்தாப் கில் மீது ஏற்கனவே ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், உள்துறை முதன்மை செயலாளர் இந்த  பாதுகாப்பு குறைபாட்டுக்கு நேரடி பொறுப்புடையவர். எனவே, இந்த குழுவை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்" என்று தெரிவித்தார். 


 



 


மேலும், பிரதமரின் பயணத் திட்டம் போது கடைபிடிக்கப்பட்ட  விதிமுறைகள், பாதுகாப்பு மற்றும் அவசர காலத்திற்கான திட்டம், சாலை வழியாக செல்லும்போது மேற்கொள்ளப்பட்ட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.  


பஞ்சாப் அரசு வழக்கறிஞர்: 


உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்படுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று  பஞ்சாப் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் பயணத்தின் போது பஞ்சாப் அரசு எந்த பொறுப்பையும் தட்டிக் கழிக்க வில்லை என்றும் தெரிவித்தார்.  


அதே சமயம், மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த மூன்று பேர் கொண்ட குழுவையும் அவர் கேள்விக்கு உட்படுத்தினார். நாட்டின் பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு சிறப்பு பாதுகாப்புக் குழுவுக்கு உண்டு. அப்படி இருக்கையில், அதன் ஐ ஜி எஸ் சுரேஷ் குமார் மூன்று பேர் குழுவில் இடம் பிடித்துள்ளார். இது, முழுமையான நியதிக்கு வழிவகுக்காது என்றும் தெரிவித்தார்.  


இதற்குப் பதிலளித்த, இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மூன்று பேர் கொண்ட குழுவில் ஐ ஜி எஸ் சுரேஷ் குமாருக்குப் பதிலாக மத்திய உள்துறை செயலாளரை நியமிக்கலாம் என்றார்.  




 


அனைத்து, வாதங்கையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிரதமரின் பஞ்சாப் பாதுகாப்பு தொடர்பான அனைத்து  ஆவணங்களையும் பாதகாத்து வைத்துக் கொள்ள பஞ்சாப் மற்றும் சண்டிகர் உயார்நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் பஞ்சாப் காவல்துறை, சிறப்பு பாதுகாப்பு குழு, மற்றும் பிற மத்திய மற்றும் மாநில அரசு முகமைகள் அவருக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். 




முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை நடத்துவதற்கென குழு ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியது. உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான செயலர் சுதிர்குமார் சக்சேனா தலைமையிலான 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.


மேலும், மத்திய உள்துறை அமைச்சகமும் , பஞ்சாப் மாநில அரசும் தனித்தனியாக அமைத்த குழு வரும் திங்கட்கிழமை வரை தங்கள் பணிகளை நிறுத்தி வைக்குமாறு உச்சநீதிமன்றம் வாய்வழியாக கேட்டுக் கொண்டது.