அரசு நிர்வாகம் பற்றி பலதரப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களை மறுக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கேட்கப்பட்ட கேள்விகளில் 14 சதவிக கேள்விகளுக்கு மட்டுமே தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் தகவல் அளித்துள்ளது.
அடுத்தபடியாக, மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில். 23 சதவிகித கேள்விகளுக்கு மட்டும் மகாராஷ்டிரா மாநில தகவல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இந்தியாவில் உள்ள தகவல் ஆணையங்களின் செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட் கார்டினை சதார்க் நாக்ரிக் சங்கதன் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
10 தகவல் ஆணையங்கள் மட்டுமே முழு தகவல்களையும் வழங்கியுள்ளன என 2021-22 ஆண்டுக்கான பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்கள் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதில் அளித்துள்ளது.
தகவல் ஆணையங்களின் செயல்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள சதார்க் நாக்ரிக் சங்கதன் அமைப்பு, "ஒரே மாதிரியான தகவல்களைக் கோரி மொத்தம் 145 ஆர்டிஐ விண்ணப்பங்கள் 29 தகவல் ஆணையங்களில் தாக்கல் செய்யப்பட்டன.
தகவல்களை தெரியப்படுத்துவதில் ஒரு அரசு அமைப்பாக தகவல் ஆணையம் எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக ஆர்டிஐ விண்ணப்பங்கள் கண்காணிக்கப்பட்டன. தகவல் ஆணையத்திற்கு வந்த புகார்கள், விதிக்கப்பட்ட அபராதம், இழப்பீடு உள்பட கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த தமிழ்நாடு தகவல் ஆணையம் மோசமாக செயல்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டால், மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலை பெற்ற பிறகுதான் தகவல்கள் அளிக்க முடியும் என தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது” என்று கூறியது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல்களை அளிக்க மாநில சட்டப்பேரவையின் அனுமதி தேவையில்லை. தற்போது அமலில் உள்ள மாநில சட்டத்தை மேற்கோள்காட்டியும் பல்வேறு காரணங்களை சொல்லியும் சத்தீஸ்கர் மாநில தகவல் ஆணையம் தகவல்களை வழங்க மறுத்துள்ளது.
தகவல்களை வழங்காமலேயே ஆர்டிஐ விண்ணப்பங்களை திருப்பி அளிக்கும் சம்பவங்களும் நாடு முழுவதும் உள்ள மாநில தகவல் ஆணையங்களில் நிகழந்துள்ளது.
ஒவ்வொரு ஆணையரும் ஓராண்டில் குறிப்பிட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மற்றும் புகார்களை தீர்க்க வேண்டும். அதன்படி, 29 தகவல் ஆணையங்களில், தலைமைத் தகவல் ஆணையம் மட்டுமே, அந்த வரம்பை நிறைவேற்றியுள்ளது.