கொரோனா பெருந்தொற்று காரணமாக, இந்தியாவில் 1,19,000 குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்/தத்து பெற்றோரை இழந்துள்ளதாக lancet ஆய்வுக் கட்டுரையில் தெரியவந்துள்ளது.


உலகளவில் 15 லட்சம் குழந்தைகள் தங்கள் பெற்றோர் அல்லது பராமரிப்பாளரை (தாத்தா/பாட்டி அல்லது பிற சட்டப்பூர்வ பாதுகாவலர்) இழந்துள்ளனர். இதில்,கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும்  அதிகமான குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்துள்ளனர். 




முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் (2021, மார்ச்-5,091) 2021 ஏப்ரல் மாதத்தில் மட்டும்,பெற்றோரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை (43,139) 8.5 மடங்கு அதிகரிப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.


 அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்  கொரோனா தடுப்புக் குழு உறுப்பினரும், ஆய்வுக் கட்டுரையின்  முதன்மை ஆசிரியர்களில் ஒருவருமான டாக்டர் சூசன் ஹில்லிஸ் கூறுகையில், "உலகளவில் ஏற்பட்ட ஒவ்வொரு இரண்டு கொரோனா இறப்புகளுக்கு,ஒரு குழந்தை தனது பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்/தத்து பெற்றோரை  இழந்துள்ளது.2021 ஏப்ரல் 30 அன்று உலகளவில் 30 லட்சம் பேர் உயிரழந்த போது, 15 லட்சம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர். மொத்த எண்ணிக்கையில், அம்மாவை இழந்த குழந்தைகளை விட அப்பாவை இழந்த எண்ணிக்கை 5 மடங்கு அதிகமாக உள்ளது. ஒளிமயமான எதிர்காலம் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். அவர்களை பாதுகாக்க சமூக பாதுகாப்புத் திட்டத்தில் முதலீடுகளை செய்ய நாம் முன்வர வேண்டும்" என்று தெரிவித்தார்.  


பெற்றோர் அல்லது பராமரிப்பாளரை இழப்பதினால் குழந்தைகளின்  உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில்  கடுமையான பாதிப்புகள் ஏற்படும். குறுகிய மற்றும் நீண்டகால  விளைவுகளை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் குற்றங்கள், வன்முறை சம்பவ புகார்கள், குழந்தை தொழிலாளர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 


Child marriage in Lockdown | 40 சதவிகிதம் அதிகரித்த குழந்தைத் திருமணங்கள் - தமிழ்நாட்டில் அதிர்ச்சி!


முன்னதாக, கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த  குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தை  மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், குழந்தைக்கு 18 வயதாகும் போது பயன்படும் வகையில் ரூ 10 லட்சம் வைப்புத்தொகையை பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் பிஎம் கேர்ஸ் அளிக்கும். இந்த தொகை, 18 வயதில் இருந்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு உயர் கல்வியின் போது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான உதவித் தொகையை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும். மேலும், 23 வயதானவுடன், தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பயன்பாட்டிற்காக மொத்த பணமும் பயனாளிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 


18 வயது வரையிலான குழந்தைகளுக்கு சைனிக் பள்ளி, நவோதயா பள்ளி போன்ற உண்டி-உறைவிட மத்திய அரசு பள்ளிகளில் குழந்தைக்கு சேர்க்கை வழங்கப்படும்.


குழந்தை ஒரு வேளை பாதுகாவலர்/தாத்தா-பாட்டி/உறவினரின் பராமரிப்பில் இருந்தால், அருகிலுள்ள கேந்திரிய வித்யாலயாவிலோ அல்லது தனியார் பள்ளியிலோ சேர்க்கை வழங்கப்படும். குழந்தை தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டால், கல்வி உரிமை சட்டத்தின் படி பிஎம் கேர்ஸில் இருந்து கட்டணம் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.   


முன்னதாக, தமிழ்நாட்டில் 3600க்கும் அதிகமான குழந்தைகள்  தங்கள் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்துள்ளதாக மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையர் சரஸ்வதி ரங்கசாமி  தெரிவித்தார். கொரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்து வாடும் குழந்தைகளுக்கும் அவர்களின் ஒற்றை பெற்றோருக்கும் உடனடி நிவாரணமாக 3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். 


TN Corona Management: கொரோனாவால் உயிரிழக்கும் செய்தியாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு