இந்தியாவில் பெகாஸஸ் ஸ்பைவேர் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்ட 300 நபர்களின் பட்டியல் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து அரசு அதிகாரபூர்வமாக எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்றாலும் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இதுகுறித்து அரசுக்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தொலைபேசி ஒட்டுக்கேட்கும் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாக பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.




2008 முதல் 2009ம் ஆண்டு காலக்கட்டத்தில் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் ஒருவரது போனை ஒட்டுக்கேட்கும் முறை குறித்து விவரித்துள்ளார். ‘ஒரு நான்கு இலக்கக் கோட்( code)ஐ அழுத்தவேண்டும். உடனடியாக நாம் எந்த போனை ஒட்டுக்கேட்க நினைக்கிறோமோ அவர்கள் போனில் பேசுவது நமக்குக் கேட்கும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனை இஸ்ரேலில் இருந்து தருவிக்கப்பட்ட போன் ஒட்டுகேட்கும் கருவி என அவர் உள்துறை அதிகாரிகளுக்குக் குறிப்பிட்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அதன்பிறகு தனிப்பட்ட உபயோகத்துக்கு மற்றும் அரசு உபயோகத்துக்கு என இரண்டு மொபைல் போன்களை உபயோகிக்கத் தொடங்கினார்கள். இதனை குஜராத்தின் காந்திநகரைச் சேர்ந்த ராஜீவ் ஷா என்னும் பத்திரிகையாளர் சொன்னதாக ராஜ்தீப் சர்தேசாய் ‘ 2019:How Modi Won India' என்கிற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த ஒட்டுக்கேட்கும் கருவி வாங்கப்பட்டதா இல்லையா என்கிற எந்தவித விவரமும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. 




முன்னதாக,காங்கிரஸ் எம்பி  ராகுல் காந்தி பயன்படுத்திய 2 செல்போன் எண்கள் மற்றும் அவரின் நண்பர்கள், ஆலோசகர்களின்  பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கார்டியன், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட 17 ஊடகங்கள் இணைந்து நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது.


 


இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ உருவாக்கிய பெகாசஸ் செயலி இப்போது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் இந்தியாவின் சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன. என்எஸ்ஓ மீது ஏற்கெனவே வாட்ஸ் அப் நிறுவனமும் புகார் கொடுத்திருந்தது. 


 


இந்தியர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் நிபுணர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 




இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி  ராகுல் காந்தி பயன்படுத்திய 2 செல்போன் எண்கள் மற்றும் அவரின் நண்பர்கள், ஆலோசகர்களின்  பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கார்டியன், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட 17 ஊடகங்கள் இணைந்து நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது.  மேலும், பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகனும், சட்டமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியின் செல்போனும் உளவுபார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மற்றும் மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு உளவு பார்க்கவில்லை என்று கூறிய, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரின் செல்போனும் உளவுபார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.