கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின் மருந்துகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகம்.

Continues below advertisement


இதனை வயதுவந்த நபர்கள் மத்தியில் குறிப்பிட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் நடந்துகொண்டிருக்கும் மருத்துவ பரிசோதனைகளின் தரவை சமர்ப்பிக்க வேண்டும், நோய்த்தடுப்புக்குப் பின் ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்தத் தடுப்பூசிகளை ஒரு டோஸ் ரூ.275க்கு விற்கவும் அதில் கூடுதலாக ரூ.150 சேவைக் கட்டணம் வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.


இந்த அனுமதியானது புதிய மருந்துகள் மற்றும் கிளினிக்கல் பரிசோதனைகள் சட்டம் 2019ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது. சப்ஜக்ட் எக்ஸ்பர்ட் கமிட்டி எனப்படும் அமைப்பு கடந்த 19 ஆம் தேதியன்று சீரம் இன்ஸ்டிட்யூட்டின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கும் சந்தைப்படுத்துதல் அனுமதிய வழங்குமாறு டிஜிசிஐக்கு பரிந்துரைத்தது. அதன்படியே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின், அரசு ஒழுங்குமுறை விவகாரத்துறை இயக்குநர் பிரகாஷ் குமார் சிங், இது தொடர்பான அறிக்கையை கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையரகத்துக்கு சமர்ப்பித்தார். அதன் பின்னர் டிஜிசிஐ கூடுதல் தகவலைக் கேட்டது.  அப்போது, இந்தியாவில் பரவலாக கோவிஷீல்டு பயன்படுத்தப்பட்டிருப்பதும். அதனால், ஏற்பட்ட நல்ல விளைவுகளுமே அதன் திறனுக்கான சாட்சி என்று தெரிவிக்கப்பட்டது.
அதே போல், ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக்கின் முழுநேர இயக்குநர் வி.கிருஷ்ண மோகன் அனுப்பிய விண்ணப்பத்தில் கோவாக்சின் வேதிக்கூறுகள், அதன் உற்பத்தி முறை, அதன் மீதான கட்டுப்பாடு, ப்ரி கிளிக்கல், கிளினிக்கல் சோதனை முடிவுகள் என அனைத்தையும் இணைத்து டிஜிசிஐக்கு அனுப்பியிருந்தார். இந்த மருந்து சந்தைக்கு வருகிறது என்றால் அதற்காக சாமான்ய மக்களே மருந்துக்கடைகளில் வாங்கக் கூடும் என்று அர்த்தமில்லை. இவற்றை மருத்துவமனைகள் வாங்கலாம். பயன்படுத்தியதற்கான தகவல்களை மருத்துவமனைகள் கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


தேசிய மருந்துகள் விலை நிர்ணய முகமையானது இந்த மருந்து மக்களுக்கு கையடக்க விலையில் சென்று சேரும் வகையில் விலையை நிர்ணயிக்கும்படி பணிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு கோவாக்சினின் விலை ரூ.1200 என்றும், கோவிஷீல்டு ரூ.780 என்றும் தனியார் மையங்களில் உள்ளது. இதில் ரூ.150 சேவைக் கட்டணமும் அடங்கும்.  


இந்தியாவில் கடந்த 2021 ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி அரசு மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்குகிறது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் இன்ஸ்டிட்யூட்டின் கோவிஷீல்டு தடுப்பூசிகளே அரசால் வழங்கப்படுகிறது. தற்போது தொடங்கப்பட்ட 15 வயது முதல் 18 வயதானோருக்கான தடுப்பூசித் திட்டத்தில் அனைவருக்கும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.