கர்நாடகா மாநிலத்தில் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் எடுக்கச் சென்ற மணமகன், மணப்பெண் இருவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமண போட்டோஷூட்
திருமணம் பற்றி ஒவ்வொருவருக்கும் வித்யாசமான கனவு, ஆசை, எண்ணம் இருக்கும். தற்போதைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய திருமணம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என விதவிதமான ஆசைகளுடன் இருக்கிறார்கள். குறிப்பாக திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இதற்காக பல இடங்களுக்கும் பயணப்படுகின்றனர். அப்படி ஆசையாக போட்டோஷூட் செய்ய சென்ற இளம் ஜோடிக்கு நேர்ந்த சோகம் கொடுமையானது.
ஒரே நேரத்தில் 2 திருமணம்
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கொப்பம் மாவட்டத்தின் கனுமனகட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் கரியப்பா மடிவாளா. 26 வயதான இவருக்கும், அதே மாவட்டம் காரடகி தாலுகாவில் உள்ள முஸ்டூரு கிராமம் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற 19 வயது பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இது பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டதாகும். டிசம்பர் 20ம் தேதி இவர்களது திருமணம் நடைபெறவிருந்தது. இதே நாளில் கரியப்பாவின் அண்ணன் ரமேஷூக்கும் திருமணம் நடைபெற முடிவு செய்யப்பட்டது.
திருமணத்திற்கு 2 வாரங்கள் இருக்கும் நிலையில் திருமணத்திற்கு முன்பு போட்டோஷூட் நடத்த 2 புதுமண ஜோடிகளும் முடிவு செய்தனர். அதன்படி இரண்டு இரு சக்கர வாகனங்களில் 4 பேரும் புறப்பட்டுச் சென்றனர். குடும்பத்தினரின் சம்மதத்துடன் பல்லாரி மாவட்டம் ஒசப்பட்டே, உம்னாபாத் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பைக்கில் சென்று விதவிதமான போட்டோஷூட் எடுத்து மகிழ்ந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
லாரி மோதி விபத்து
எல்லா திட்டம் முடிந்த பிறகு தனது வருங்கால மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டில் விட சென்றுள்ளார். நேற்று முன்தினம் கங்காவதி அருகேயுள்ள சிக்கபெனகல் கிராமம் வழியாக 2 பேரும் சென்றிருக்கின்றனர். அப்போது சாலையோரம் ஒரு லாரி பழுதாகி நின்றிருந்தது. இதனால் சாலையில் இருந்து நடுரோட்டிற்கு பைக்கை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பக்கத்தில் வேகமாக வந்த மற்றொரு லாரி கரியப்பாவின் பைக்கின் மீது வேகமாக மோதியது.
இதில் கரியப்பா மற்றும் அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கவிதா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை கண்டு இருவரின் குடும்பத்தினரும் கதறி அழுதனர். திருமண வேலைகளில் இருந்த உறவினர்களும் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வந்தனர். கரியப்பா, கவிதா உடல்களைக் கண்டு அழுது துடித்த சம்பவம் காண்பவர்களை கண்கலங்க வைத்தது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கங்காவதி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.