கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை கடந்தமாதம் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் சாமி கோவிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர்.
பம்பை வரை வாகனங்களில் வருபவர்கள் யாராக இருந்தாலும் ஐந்து கிலோ மீட்டர் துாரத்தில், மலை உயரத்தில் உள்ள சபரிமலை சன்னிதானத்திற்கு நடந்து சென்றுதான் சுவாமி ஐயப்பனை தரிசிக்க வேண்டும். அதிலும் நீலிமலை மற்றும் அப்பச்சி மேடு ஆகிய பகுதிகள் கிட்டத்தட்ட செங்குத்தாக ஏறுவது போல இருக்கும், ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போது நிறைய மூச்சு வாங்கும். நல்ல உடல் நிலையில் திடகாத்திரமாக இருப்பவர்களே நின்று, நின்று நிறைய ஒய்வு எடுத்தே ஏறுவர்.
மேலும் சபரிமலை கோவிலுக்கு தேவையான பொருட்களை துவக்கத்தில் கழுதை மீது கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில், தற்போது டிராக்டர்களில் கொண்டு செல்லப்படுகின்றன. இது, பக்தர்களின் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இதனால், 'ரோப்கார்' போக்குவரத்து சேவை அமைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்து பலகட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. பம்பை ஹில்டாப்பில் இருந்து சன்னிதானம் வரை 2.7 கி.மீ., துாரத்திற்கு 271 கோடி ரூபாய் செலவில், ரோப்காருக்கான கேபிள்கள் அமைக்கப்படுகின்றன. காட்டின் உட்பகுதியில் மொத்தம் ஐந்து துாண்கள் நிறுவப்படும்.
கேரள உயர் நீதிமன்ற அனுமதியுடன், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி மொத்தம், 80 மரங்கள் வெட்டப்பட வேண்டும். இன்று, வனவிலங்கு சரணாலய வாரியத்தின் கூட்டம் நடக்கிறது. இதில் முடிவு எடுக்கப்படும். அடுத்த மாதம் நடக்கவுள்ள மகரஜோதியின் போது, ரோப்காருக்கான கேபிள்கள் அமைக்க அடிக்கல் நாட்டப்படும். பம்பையில் இருந்து சரக்குகள் கொண்டு செல்வதற்காக இது நிறுவப்பட்டாலும் நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், அவசர சிகிச்சை தேவைப்படுவோர் ரோப்கார் சேவையை பயன்படுத்தலாம்.
குறிப்பாக பெருவழி பாதையை தவிர்க்கவும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டத்தை எதிர்கொள்வது தொடர்பான அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சன்னிதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்குப்பின் கோட்டாட்சியர் அருண் எஸ்.நாயர் கூறியதாவது, உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும். நிலக்கல் - பம்பை வழியாக வர வேண்டும். பெருவழிப் பாதை, புல்மேடு பாதையில் மீட்பு, மருத்துவ வசதி செய்வதில் சிரமங்கள் உள்ளன. பக்தர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.