உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத். இவர் கடந்த 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை அந்த மாநிலத்தின் முதல்வராக பொறுப்பு வகித்தவர். இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரசுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறது. தினசரி பாதிப்பு நாடு முழுவதும் 3 லட்சம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. முதல் அலையை காட்டிலும் இரண்டாவது கொரோனா பரவல் பேரலையில் உயிரிழப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதனால் கொரோனா பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இந்த சூழலில், திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ள கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ஒரு தத்துவ கோணத்தில் பார்த்தால் கொரோனா வைரசஸும் ஒரு வாழும் உயிரினம். நம்மைப் போலவே கொரோனா வைரஸுக்கு வாழ்வதற்கான முழு உரிமையும் உள்ளது. ஆனால், மனிதர்களாகிய நாம் கொரோனா வைரஸை நம்மில் இருந்து அகற்ற நினைக்கிறோம். அதனால்தான் அது தன்னை மாற்றிக்கொள்கிறது என்று கூறியுள்ளார்.




நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக தீவிரமாக போராடிவரும் இந்த சூழலில், கொரோனா வைரஸுக்கு வாழ்வதற்கான முழு உரிமையும் உள்ளது என்று முன்னாள் முதல்வரான திரிவேந்திர சிங் ராவத் கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரசுக்கு எதிராக பா.ஜ.க. எம்.எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பா.ஜ.க.வின் முன்னாள் முதல்வரே இவ்வாறு கூறியிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.