இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதத்தில் நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்திற்கும் அதிகமான அளவில் பதிவாகி வந்தது. இதையடுத்து, ஊரடங்கு, தடுப்பூசிகள் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு தினசரி பாதிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 44 ஆயிரத்து 111 நபர்கள் கொரோனாவால் புதியதாக பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 57 ஆயிரத்து 477 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 738 நபர்கள் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 5 லட்சத்து 2 ஆயிரத்து 362 ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 96 லட்சத்து 5 ஆயிரத்து 779 ஆகும்.
தற்போது இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 95 ஆயிரத்து 533 ஆகும். கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்த 738 நபர்களையும் சேர்த்து கொரேனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து ஆயிரத்து 50 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்தி வருகிறது. இதுவரை நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 34 கோடியே 46 லட்சத்து 11 ஆயிரத்து 291 ஆகும்,
இந்தியாவில் தற்போது 4.95 லட்சம் நபர்கள் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் 97 நாட்களுக்கு பிறகு கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது. மொத்த பாதிப்பில் 1.62 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை காட்டிலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் எண்ணிக்கை 51 நாட்களாக தொடர்ந்து அதிகளவில் உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் எண்ணிக்கை 97.06 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தினசரி பாதிப்பு வீதம் 2.35 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 26 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு வீதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக பதிவாகி உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 41.64 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.